Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அனுமதியில்லாத நாட்டு துப்பாக்கி உடன் மூன்று பேர் கைது.

0

 

சமயபுரம் அருகே உள்ள நெ.1 டோல்கேட் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ராஜா. இவர் அரசு அனுமதியுடன் நாட்டு வகை துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார்.


அதை வைத்து குருவி, கொக்குகளை தொடர்ந்து வேட்டையாடி வந்திருக்கிறார். இந்த நாட்டுத் துப்பாக்கியின் அனுமதி காலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு பெற்றது. அதற்குப் பின் துப்பாக்கியின் அனுமதியை புதுப்பிக்காமல் ராஜா வீட்டிலேயே துப்பாக்கியை வைத்துள்ளார்.

இந்நிலையில் சமயபுரம் கோயில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் சமயபுரம் அருகே வி. துறையூரைச் சேர்ந்த ராகுல் ஆகியோர் ராஜாவிடம் வேட்டையாடும் கொக்கு மற்றும் குருவி கறிகளை தொடர்ந்து வாங்கி வந்துள்ளனர். இதனால் இவர்களுக்கும் ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொக்கு கறி வாங்குவதற்காக ராஜாவை சந்திக்க ராஜாவின் வீட்டிற்க்கு இவர்கள் 2 பேரும் சென்றுள்ளனர். அப்போது அந்த வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கி குறித்து ராஜாவிடம் விசாரித்துள்ளனர்.
அனுமதி காலம் முடிந்துவிட்டதால் வீட்டில் வைத்திருப்பதாக ராஜா அவர்களிடம் கூறியுள்ளார். அனுமதி காலாவதி ஆகி இருப்பதால் கண்ணன் மற்றும் ராகுல் இருவரும் ரூ.7.500 கொடுத்து ராஜாவிடமிருந்து நாட்டு துப்பாக்கியை வாங்கி உள்ளனர்.

இதையடுத்து நாட்டு துப்பாக்கி வேலை செய்யாததாலும், வேட்டையாடுவதற்கு துப்பாக்கி ரவைகள் தேவை என ராஜாவிடம் இருவரும் கேட்டுள்ளனர். அப்போது சமயபுரம் அருகே மருதூரில் உள்ள திருச்சி சிதம்பரம் சாலைக்கு வருமாறும் அங்கு துப்பாக்கிக்கு தேவையான ரவைகள் மற்றும் அதை எவ்வாறு உபயோகிப்பது என்பது தொடர்பான பயிற்சிகளை சொல்லிக் கொடுப்பதாக கூறி வரவழைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் கண்ணன் மற்றும் ராகுல் நின்று கொண்டு இருந்த அதேநேரம், சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது துப்பாக்கியுடன் நின்ற கண்ணன் மற்றும் ராகுலை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்தத் துப்பாக்கி நரிக்குறவர் தோப்பைச் சேர்ந்த ராஜாவிடம் ரூ.7.500 கொடுத்து வாங்கியதாக கூறினர். இதனைத்தொடர்ந்து அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் துப்பாக்கியின் உரிமம் முடிந்து 2 வருடங்களுக்கு மேலானதை போலீசாரிடம் கூறினர்.

இது குறித்து சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் தடை செய்யப்பட்ட ஆயுதம் வைத்திருந்தாக வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ல் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.