Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரியமங்கலம் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலக வாயிலில் தம்பதியினர் கண்ணீர் போராட்டம்.

0

 

பானிபூரி கடையை நடத்த கூடாது என தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளரை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தம்பதியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா.

திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் அபிராமி. இவரது கணவர் அரவான். இவர்கள் அரியமங்கலம் எஸ்.ஐ.டி கல்லூரி அருகே தள்ளு வண்டியில் பானிபூரி கடை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திருவானந்தம் பானிபூரி கடையை காலி செய்ய வேண்டும் என மிரட்டுவதாக கூறி அபிராமி அரவான் தம்பதியினர் நேற்று இரவு 8 மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல் உதவி ஆணையர், காவல் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு சென்றனர்.

இது குறித்து பானிபூரி கடை நடத்தி வரும் அபிராமி அரவான் தம்பதியினர் கூறுகையில்….

நாங்கள் கடந்த 9 வருடங்களாக எஸ்.ஐ.டி கல்லூரி அருகே பானிபூரி கடை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு வருடமாக அந்த பகுதியில் யாரும் கடை நடத்த கூடாது என எஸ்.ஐ.டி கல்லூரி நிர்வாகத்தினர் வேலி அமைத்து இருந்தனர். இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்து கடையை நடத்த அனுமதி வாங்கி நேற்று முன் தினம் (01.03.23) கடையை தொடங்கினோம். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடையை காலி செய்ய வேண்டும் இல்லையென்றால் பிராத்தல் வழக்குப்பதிவு செய்து விடுவேன் என்று மிரட்டினார். இது குறித்து நேற்று காலை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். புகார் அளித்த சிறிது நேரத்தில் எங்களது பானிபூரி கடையின் வண்டியை எடுத்து சென்று விட்டனர்.

ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் எங்களை மிரட்டி வரும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு வாழ வழியில்லை எங்களை கொன்று விடுங்கள் எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.