

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:
முதியவருக்கு ஆயுள் தண்டனை,
திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு .
திருச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்து போலீஸார் தெரிவித்திருப்பது :
திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் துரை (70). இவர் அதே பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுமியை (தற்போது சிறுமிக்கு 6 வயது) கடந்த 2019 ஆவது ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதியன்று மறைவான பகுதிக்கு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இச்சம்பவத்தை எதேச்சையாக கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சத்தம் போடவே, துரை அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர், ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மறுநாள் துரையை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்சன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த துரைக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, துரை பலத்த போலீஸ் பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக அருள்செல்வி ஆஜராகினார்.

