Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் பரிசோதனையில் கேட்கப்பட்ட கேள்விகள்.

0

 

திருச்சி மாவட்டம் திருவளர்ச்சோலையில் 2012ஆம் ஆண்டு அமைச்சர் கே.என் நேருவின் சகோதரரான ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பற்றிய துப்பு போலீசாருக்கு கிடைக்கவில்லை.

இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்ற போதும் துப்பு கிடைக்காததால், உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டது. பல ஆண்டுகளாகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால், தமிழ்நாடு அரசு இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கவும், சிபிஐயின் விசாரணைக்கு உதவுவதற்காகவும், சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

சிபிசிஐடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட டிஎஸ்பி-க்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துரிதப்படுத்தியது. குறிப்பாக, ராமஜெயம் கொலை நடந்த காலகட்டத்தில் சந்தேகப்படும் வகையில் இருந்த 13 ரவுடிகளின் செல்போன் எண்களை அடிப்படையாகக்கொண்டு விசாரணை நடத்தினர். பின்னர் சந்தேகப்படும் 13 நபர்களில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டு, இதற்காக தடயவியல் நிபுணர்கள் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று (ஜன 18) சென்னை டிஜிபி அலுவலகம் அருகே அமைந்துள்ள தடயவியல் அலுவலகத்தில், முதற்கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனையானது மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இந்த சோதனைக்காக திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சத்யராஜ் உள்ளிட்ட நான்கு பேர் அவர்களது வழக்கறிஞருடன் வந்து இருந்தனர்.

சோதனை முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி, இந்த சோதனைக்காக ஆஜரான ஒவ்வொருவரிடமும் மொத்தம் 12 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதில் 6 கேள்விகள் மட்டுமே கொலை வழக்கு தொடர்புடையது என்றும் தெரிவித்தார்.

உங்கள் பெயர் என்ன?

ராமஜெயத்தை கொலை செய்தது நீங்களா?

உங்களுக்கு பேட்மிண்டன் விளையாடும் பழக்கம் உள்ளதா?

ராமஜெயம் கொலை நாளன்று திருச்சி ரயில் நிலையம் அருகே சென்றீர்களா?

நடப்பது என்ன ஆண்டு?

ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளன்று நீங்கள் பயன்படுத்திய சிம்கார்டின் நம்பர் என்ன?

இந்த ஆண்டு ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளீர்களா?

இதற்கு முன்பாக பொய் சாட்சிக்காக ஆஜராகி உள்ளீர்களா?

ராமஜெயத்தை கொலை செய்தது யார்?

ராமஜெயத்தின் மோதிரத்தை நீங்கள் எடுத்தீர்களா?

ராமஜெயத்தை தாக்கினீர்களா?

மொத்தம் 12 கேள்விகள் கேட்கப்பட்டு அதை வீடியோ பதிவு செய்துள்ளதாகவும், 12 கேள்விகளை ஒரு நபரிடம் 6 முறை கேட்கப்பட்டதாகவும், 20 நொடிகள் கழித்து மாற்றி மாற்றி கேள்விகளை கேட்டனர் என்றும், அதற்கு ஆம் இல்லை என்று மட்டும் பதிலளித்தால் போதுமானது என அதிகாரிகள் கூறியதாக புகழேந்தி தெரிவித்தார்.

இந்தக் கேள்வி கேட்கப்படும்போது பதில் சொல்பவரின் இதயத்துடிப்பு ஆகியவற்றை கிராஃப்ட் பேப்பரில் குறித்து வைத்து கொள்ளப்படும். மனிதனுக்கு ஈசிஜி சோதனை எடுக்கப்படும் போது, எவ்வாறு அது கிராப் பேப்பரில் அலைகள் போன்று மேலும் கீழுமாக செல்வது போல செல்லும் அதனை வைத்து அவர்கள் உண்மையை சொல்கிறார்களா அல்லது பொய் சொல்கிறார்களா என முடிவு செய்து கொள்வார்கள்.

இதன் அடிப்படையில் உண்மை கண்டறியும் சோதனையின் முடிவு அறிக்கை தயாரிக்கப்படும். உண்மை கண்டறியும் சோதனையின் அறிக்கையின் முடிவு இந்த வழக்கில் எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

இது ஒரு கண்துடைப்பு முயற்சியாகும்.
கொலை வழக்குகளில் ஆதாரங்கள் சாட்சியங்கள் தான் மிக முக்கியமானவை உண்மை கண்டறியும் சோதனை மூலம் அவர் உண்மை சொல்லி இருக்கிறார் அல்லது பொய் சொல்லி இருக்கிறார் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் எனவும் இதனால் எந்த பயனும் இல்லை.

இந்த வழக்கில் நரை முடி கணேஷ் என்பவருடைய செல்போன் எண் கொலை நடந்த சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டவரில் பதிவானது. அதன் மூலமாக மோகன் ராம், தினேஷ், சத்யா உள்ளிட்டவர்களும் தொடர்பில் வருகிறார்கள். அதன் அடிப்படையில் இவர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இந்த சோதனை நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தினால் டெல்லியில் இருந்து தடயவியல் நிபுணர் மோசஸ் என்பவர் வரவழைக்கப்பட்டு அவரது தலைமையில் கேள்வியில் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இன்று (ஜன 19) நடைபெறும் இரண்டாம் கட்ட உண்மை கண்டறியும் சோதனையில் செந்தில், கலைவாணன்,
திலீப் ஆகிய மூவரும் மயிலாப்பூரில் உள்ள தடவியல் அறிவியல் துறையில் ஆஜராகி உள்ளனர். மேலும் சுரேந்தர் என்பவரும் இன்று ஆஜராக உள்ளார் சோதனைக்காக ஆஜராக உள்ளார்.
மேலும் நேற்று உண்மை கண்டறியும் சோதனையில் ஈடுபட்ட சத்யராஜ் இடம் இன்று இரண்டாவது நாளும் உண்மை கண்டறியும் சோதனைக்கு அவர் ஆஜராக உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.