Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி,வாகனங்கள் பறிமுதல்.

0

திருச்சி தென்னூர் பகுதியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.
5 பேர் கைது.

திருச்சி தென்னூர் சவேரியார் கோயில் தெரு அருகே ரேஷன் அரிசி வாகனங்களில் பதுக்கி வைத்துள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவின் படி திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அறிவுறுத்தலின்படி திருச்சி சரக டி.எஸ்.பி. சுதர்சன் மற்றும் திருச்சி இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஒரு கும்பல் 2 டாடா ஏ.சி. மற்றும் பொலிரோ பிக் அப் வாகனங்களில் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை ஒரு பெரிய ஈச்சர் வேனில் ஏற்றி கொண்டிருந்தனர்.
போலீசை கண்டதும்
அவர்கள் தப்பியோட முயன்றனர்.
ஆனால் விடாமல் போலீசார் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் பிடிப்பட்டவர்கள் திருச்சி பொன்மலையை சேர்ந்த சேக் முக்தார்,தென்னூர் சவேரியார் கோயில் தெருவை சேர்ந்த மதியழகன், திருச்சி சீனிவாசன் நகரை சேர்ந்த முத்துக்குமார்,
அரியமங்கலத்தை சேர்ந்த ஈஸ்வரன், அண்ணா நகரை சேர்ந்த ஆறுமுகம் என தெரியவந்தது. பின்னர் இந்த 5 பேரையும் கைது செய்து 50 கிலோ எடை கொண்ட 225 மூட்டைகளில் சுமார் 11,250 கிலோ ரேசன் அரிசியை கைப்பற்றினர்.

மேலும் கைது செய்தவர்களிடம் விசாரணை செய்ததில் திருச்சி தென்னுரை சேர்ந்த பாபு என்கிற சாதிக் பாட்ஷா கள்ளத்தனமாக ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி கடத்த முயன்றது தெரியவந்தது. கைதான சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் தனது வீட்டிற்கு எதிரே உள்ள காலி இடத்தை ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக பதுக்க வாடகைக்கு இடம் கொடுத்துள்ளார். மேலும் பாபு என்கிற சாதிக் பாஷாவிடம் சேக் முத்தார் வரவு செலவு கணக்கு பார்த்ததாகவும், முத்துக்குமார் அங்குள்ள வாகனங்களை ஓட்டும் ஓட்டுநராகவும் ஈஸ்வரன், ஆறுமுகம் பொதுமக்களிடம் கிராமங்களில் குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி வாகனத்தில் ஏற்றி இந்த சம்பவ இடத்திற்கு வாகனத்தில் கொண்டு வந்து சேர்க்கும் பணிகளை செய்து வந்து உள்ளனர். இந்த ரேஷன் அரிசியை நாமக்கல் கோழி பண்ணைகளுக்கு அதிக லாபத்திற்கு விற்பனை செய்யத் திட்டமிட்டு இருக்கலாம் என தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் ரூ. 82 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாபு என்கிற சாதிக் பாஷா தலைமறைவாகி உள்ளார்.அவரை தேடி கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.