Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சென்னை வாலிபரின் இருசக்கர வாகனத்தை மீட்டு தந்த திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு போலீசார்.

0

 

திருச்சியில் விபசார தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்ட ஆய்வில், சென்னையில் திருடுபோன, உயர்ரக இரு சக்கர வாகனம் மீட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருச்சி மாநகர விபசார தடுப்பு பிரிவு போலீஸாருக்கு வந்த புகாரின் அடிப்படையில்,ஆய்வாளர் கருணாகரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மோகன், பாலசரஸ்வதி உள்ளிட்ட குழுவினர் கருமண்டபம், அசோக் நகர் பகுதியில் அண்மையில் சோதனை மேற்கொண்டனர். இதில் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கரூர் மாவட்டம் செல்லாண்டி பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை வைத்து, திருவானைக்கா பகுதியைச் சேர்ந்த ஐ. ஜான் என்கிற பிலோமிநாதன் என்பவர் விபசாரத் தொழில் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை போலீஸார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பிலோமிநாதனை கைது செய்து, அவர் வைத்திருந்த உயர் ரக இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த இரு சக்கர வாகனம் நண்பருடையது என அவர் கூறியதை அடுத்து, வாகனத்தின் ஆவணங்கள் மற்றும் வாகன உரிமையாளரின் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை ஒப்படைத்து இருசக்கர வாகனத்தை எடுத்துச்செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர், ஆனால் அதன் பின்னர் பல நாள்களாகியும் வாகனத்தின் ஆவணங்களுடன் யாரும் வாகனத்தை மீட்க முன் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார் இருசக்கர வாகனத்தின் (சுரண்டி அழிக்கப்பட்டிருந்தது) பதிவெண்ணை கண்டறிந்து, அந்த வாகனம் குறித்த விவரங்களை இணைய வழியில் சோதனை செய்தபோது, அது சென்னை, கிரீம்ஸ் சாலை, திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த ஆர். ராஜேஷ் என்பவருக்குச் சொந்தமான வாகனம் என்பது தெரியவந்தது. அதிலிருந்த உரிமையாளரின் தொடர்பு எண்ணை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அந்த வாகனம் கடந்த ஏப்ரல் மாதம் கோடம்பாக்கம் பகுதியில் நிறுத்தியிருந்தபோது மாயமானதும், அது தொடர்பாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து கோடம்பாக்கம் போலீஸார் பரிந்துரையின் பேரில், திருச்சி விபசாரத் தடுப்பு பிரிவு போலீஸார் வாகன உரிமையாளரை திருச்சி வரவழைத்து, வாகனத்தை திருச்சி 2 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து நீதிபதி பாலாஜி உத்தரவின் பேரில் நேற்று மாலை உரிமையாளரிடம் இருசக்க வாகனத்தை ஒப்படைத்தனர்.

வாகன உரிமையாளர் ராஜேஷ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து தனது இருசக்கர வாகனத்தைப் பெற்றுச்சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.