Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் தங்கியிருந்த மேன்சனின் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

0

திருச்சியில் இன்று
போக்குவரத்து அதிகாரி தங்கி இருக்கும் மேன்ஷனில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை.

திருச்சி போக்குவரத்து துணை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) வகித்து வருபவர் அழகரசு. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது திருச்சியில் பணியாற்றி வரும் அழகரசு திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மேன்சனில் முதல் தளத்தில் 7வது நம்பர் சொகுசு அறையில் தங்கியுள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு அவர் பதவி உயர்வு பெற்று திருச்சியில் துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். அவரது குடும்பத்தினர் சொந்த ஊரில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் திருச்சி லஞ்ச ஒழிப்பு துணை போலி சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அழகரசு தங்கியுள்ள மேன்சன் அறையில் புகுந்து சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனை தொடர்ந்து காலை 11 மணி வரை நடந்தது.5 மணி நேரமாக நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த அதிகாரியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இது பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும் போது,
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆவணங்கள் நகை பணம் ஏதேனும் சிக்கி உள்ளதா? என்பது பின்னர் தெரியப்படுத்தப்படும் என்றனர்.

போக்குவரத்து அதிகாரி தங்கி உள்ள மேன்ஷனில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தப்பட்டது வில்லியம்ஸ் ரோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.