சமயபுரம் டோல்கேட்டில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த சிக்னல்கள் ஏற்படுத்த மநீம வக்கீல் கிஷோர்குமார் கோரிக்கை.
சமயபுரம் நெ.1 டோல்கேட் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த டிராபிக் சிக்னல்கள் ஏற்படுத்தி இயக்கவேண்டும்.
திருச்சி மாவட்ட காவல் துறைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் கோரிக்கை.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி புறநகர் பகுதிகளான முசிறி, துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட எந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றாலும் திருச்சி சமயபுரம் நெ.1 டோல்கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். இதனாலேயே இப்பகுதி தினம், தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதனால் தினம்தோறும் பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் ஆபத்தான பயணத்தையே மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இப்பகுதியில் கனரக வாகனங்கள் அதிக அளவில் வருவதும் அந்த வாகனங்கள், சாதாரண வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி கடந்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. மேலும் மேற்படி நெ.1 டோல்கேட் பகுதியில் பீக் ஹவர்சிலும், சாதாரண நேரங்களிலும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர்கள் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவலர்கள் இணைந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்து வருகிறார்கள்.
ஆனால் தற்பொழுது நெ.1 டோல்கேட் பகுதியில் தினம்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். மேலும் மேற்படி பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும் என்றால், போக்குவரத்து சிக்னல்களை நெ.1 டோல்கேட் பகுதியில் முறையாக அமைக்க வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கை.
மேலும் நெ.1 டோல்கேட்டை போன்றே திருச்சி மாநகர பகுதியான பழைய பால்பண்ணை பகுதியிலும் தினம், தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் பணியிலிருந்த போக்குவரத்து காவலர்களும் “மைக்” மூலமாக ஒவ்வொரு திசையில் வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தியவாறு இருந்தனர். ஆனால் தற்பொழுது மேற்படி பழைய பண்ணை பகுதியில் திருச்சி மாகர காவல் துறையால் போக்குவரத்து சிக்னல் அமைக்கபட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து சேவை சீராகியுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் மட்டும் “சிக்னல்கள்” அணைக்கப்பட்டு, நெரிசல் அதிகமான பகுதிகளில் உள்ள வாகனங்களை விரைவாக செல்ல மைக் மூலம் காவலர்கள் கட்டளையிடப்படும் முறை பின்பற்றப்படுகிறது.
எனவே திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் துணை தலைவர் அவர்கள் திருச்சி மாநகர பகுதியான பழைய பால்பண்ணையில் போக்குவரத்து சிக்னல் ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைத்ததை முன்மாதிரியாக எடுத்து கொண்டு, திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து சிக்னல் அமைக்க மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட காவல்துறையை வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
என வக்கீல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.