திருச்சி அருகே நிலத்தகராறில்
5 பேருக்கு அரிவாள் வெட்டு.
திருச்சி மாவட்டம், புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் தெரஸ்நாதன். அதிமுக பிரமுகரான இவர் புங்கனூர் சொசைட்டியில் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2017ம் ஆண்டு இவர், மதுரையை சேர்ந்த டாக்டர் கேந்திரநாத் என்பவரிடம் நவலுார்குட்டப்பட்டு கிராமத்தில் 2.04 ஏக்கர் நிலம் ஒத்திகைக்கு வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்தசில மாதங்களுக்கு முன்பு கேந்திரநாத் மற்றும் சுசி எஜூகேசனல் டிரஸ்ட்டினர் இந்த சொத்தின் மீது ஜார்ஜ்க்கு உள்ள உரிமையை மறைத்து வண்ணாங்கோயிலை சேர்ந்த ரமேஷ் மற்றும் மகாமுனியிடம் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கடந்த 28ம் தேதி ஜார்ஜ் ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாருக்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட இடத்தில் ரமேஷ் தரப்பினருக்கும், ஜார்ஜ் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் தரப்பினர் தனது அடியாட்களுடன் ஜார்ஜ் தரப்பினரை அரிவாள், குத்து ஈட்டி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்த ஜார்ஜ் தரப்பினரான புங்கனுாரை சேர்ந்த அருளானந்தராஜ் (வயது 39) ராபின் (27), பொன்ராமன் (35),அல்லித்துறையை சேர்ந்த பாஸ்கர் (32), நவலுார்குட்டப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (32) ஆகிய 5 பேரும் சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஜார்ஜ் தரப்பினர் ராம்ஜிநகர் காவல் நிலையம் முன்பு முற்றுக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து ராம்ஜிநகர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
ஜார்ஜ் புகாருக்கு ராம்ஜிநகர் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வெட்டு குத்து சம்பவம் நடந்திருக்காது என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.