அளுந்தூர் ஜல்லிக்கட்டில் 34 பேர் காயம்.
திருச்சி மாவட்டம் அளுந்தூரில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி விழாவினை தொடங்கி வைத்தார்.

தொடக்கமாக உள்ளூர் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாலை 3 மணி வரை 4 சுற்றுகளாக 719 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 215 வீரர்கள் களம் கண்ட இந்த ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், பார்வையாளர்கள் என காயமடைந்த 34 பேருக்கு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதில் திருச்சி பிராட்டியூரை சேர்ந்த செல்வத்தின் மகன் கங்காதரன் (வயது 23), மாத்தூர் அழகேஸ் (26), இலுப்பூர் ராஜா (31), சாத்தனூர் பிரபு (34), கலிமங்கலம் மதி (32) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காளைகளிடம் மல்லுக்கட்டிய வீரர்களுக்கும், மாடு பிடி வீரர்களிடமிருந்து சீறி பாய்ந்து வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி காசு, ரொக்க பணம், கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரம் என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் எம்எல்ஏக்கள் பழனியாண்டி, விஜயபாஸ்கர், திமுக ஒன்றிய செயலாளர் கருப்பையா, அதிமுக ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன் ஆகியோர் சிறந்தமாடு பிடி வீரர்களுக்கு ரொக்கத் பரிசு வழங்கினர்.