திருச்சி தாரநல்லூர் கிருஷ்ணாபுரம் ரோட்டில் புதிய மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் கலெக்டரிடம் மனு.
திருச்சி தாரநல்லூர் கிருஷ்ணாபுரம் ரோட்டில் புதிதாக மதுபான கடை திறக்க பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.
அப்போது பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாவட்ட செயலாளர் நாகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.டி. அசோக்குமார், காந்தி மார்க்கெட் மண்டல் தலைவர் சதீஷ்குமார், மாவட்ட துணை தலைவர் பாலமுருகன் ஜி, துணைத்தலைவர் இந்திரன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் திருச்சி தாரநல்லூர்
கல்மந்தை உப்பிலியத்தெரு, பாரதியார் தெரு, கிருஷ்ணாபுரம் முஸ்லிம் தெரு பகுதி மக்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற மனு ஒன்றை அளித்தார்.
அதில், திருச்சி தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் ரோடு, செக்கடி பஜார் அருகில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பகுதி குடியிருப்பு நிறைந்த பகுதியாகும். அதோடு மதுபானக்கடை திறக்க உள்ள பகுதிக்கு அருகிலேயே பாலசுந்தர விநாயகர் கோவில், மற்றொரு விநாயகர் கோவில், கொத்தாலத்து முனீஸ்வரர் கோவில் ஆகிய மூன்று கோவில்கள் அமைந்துள்ளன.
இப்பகுதிக்கு அருகே குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 300 வீடுகளில் ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர்.
இதன் நுழைவுவாயில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்திற்கு அருகில் உள்ளது. அருகிலேயே அமராவதி ரேஷன் கடையும் அமைந்துள்ளது.
இந்த தெரு மிகவும் குறுகலான தெருவாகும். வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் இந்த சாலை வழியாகத்தான் சென்று வரவேண்டும்.
இந்த பகுதியில் புதிதாக மதுபானக்கடை அமைந்தால் வழிபாடு பாதிக்கும். அதிக போக்குவரத்து உள்ள இந்த சாலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். மது பிரியர்கள் மதுவை வாங்கி கோவில் வாசலிலேயே வைத்து குடிக்கும் சூழ்நிலை உருவாகும். அத்தோடு தெருவில் விபத்துகளும் அடிக்கடி நடக்க வாய்ப்பு உள்ளது.
இங்கு தொழில் செய்யும் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மது பிரியர்களால் தொல்லையும், தொந்தரவும் ஏற்படும். எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை அமைக்க கூடாது என்று டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் டாஸ்மாக் மதுபான கடை திறப்பதை கண்டித்து மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.