தமிழகம் முழுவதும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் மறியல், கண்டனப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சியில் இன்று சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்கத்தின் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் உள்ள டிஆர்எம்யூ அலுவலகம் முன்பு துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
ரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும்,
தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்ப பெற வேண்டும், எஸ்மா சட்டம் மூலம் தொழிலாளர்களும் விரோதமான சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், ரயில்வே துறையில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.