உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் பிரச்சாரம்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சி, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ‘
செப். 15 முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் முடிகிறது. செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும் செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் அப்பகுதிகளில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட உள்ளார்.
தற்போது சேலத்தில் உள்ளவர் நாளை காலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.