திருச்சி, மத்திய சிறைச்சாலையில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் பல்வேறு நாடுகளை சேர்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட வெளி நாட்டினர் கோர்ட் உத்தரவுப்படியும், தண்டனையும் காரணமாக வைக்கப்பட்டுள்ளனர். அதிகாலை வேளையிலே கணக்கெடுப்பு நடத்துவது வழக்கம். அவ்வாறு கணக்கெடுப்பின் போது பல்கேரியா நாட்டை சேர்ந்த லிலியன் ஆட்ரகௌவ் (வயது 55) என்பவர் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. இவர் கடந்த 2019ம் ஆண்டு ஆன்லைன் மூலம் பணமோசடி செய்த வழக்கில் சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.
கைதி தப்பி தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் அருண் முகாம் சிறைக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இது தொடர்பாக தனிப்படை அமைத்து கைதியை தேடிப்பிடிக்க காவல்துறை ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
சிறைச்சாலைக்குள் தண்ணீர் நிரப்ப வந்த தண்ணி லாரி மூலம் லிலியன் தப்பியிருக்கலாம் என தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தேடினர்.
மேலும் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கைதி லிலியன் ஆட்ரகௌவ் தப்பி 2 நாட்கள் ஆகியிருக்கும் என்கிற திடுக் தகவலை சக கைதிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லிலியனை பார்த்தே 2 நாள் ஆகிறது என்று கூறிய அவர்கள் இலங்கை தமிழர்கள் ஆர்பாட்டம் போராட்டம் என போலீசார் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் அதிலேயே கவனத்தில் இருந்ததால் அதனை பயன்படுத்தி அதிகாலை நேரத்தில் தப்பியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் வெளிநாட்டு கைதி தப்பி தற்போது கேரளாவில் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.