பரம்பூர் பகுதியில் வயல்வெளிகளில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய சித்த மருத்துவர் சுயமரியாதை.
பரம்பூர் பகுதியில் வயல்வெளிகளில் சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய சித்த மருத்துவர் சுயமரியாதை மற்றும் பரம்பூர் ஆரம்ப சுகாதார பணியாளர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட இந்திய மருத்துவத்துறை மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் கொரோனா விழிப்புணர்வு முகாம் இன்று அன்னவாசல் வட்டார மருத்துவ அலுவலர் கு.கலையரசன் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்ட அன்னவாசல் வட்டார மருத்துவ அலுவலர் கு.கலையரசன் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.
அதன்பிறகு பரம்பூரை சுற்றியுள்ள பொது இடங்களில் இருந்த பொதுமக்களிடமும் , கரையன்குளம் வயல்வெளியில் நூறு நாள் வேலைபார்க்கும் பெண்களிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றி சித்தமருத்துவர் சுயமரியாதை பேசியதாவது:
கோவிட் 19 முதல் மற்றும் 2 ஆவது அலை மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடுமையான முயற்சியால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மூன்றாவது அலை டெல்டாபிளஸ் , டெல்டா வேரியண்ட் என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸினால் உண்டாகும்.
காற்றின் மூலம் பாதிக்கப்பட்டவரின் இருமல்,தும்மல் இவற்றில் உள்ள நீர்திவலைகள் மூலம் பரவக் கூடியது.
மூன்று நாட்களுக்கு மேற்பட்ட காய்ச்சல் ,அதிக அளவில் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ,வயிற்றுவலி,மூச்சு விடுவதில் சிரமம் ,தோலில் தடிப்புகள் காணப்படுதல், மணமின்மை, சுவையின்மை,சளி, இருமல் போன்றவை கொரோனாவின் அறிகுறிகள் ஆகும்.
கொரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டும் எனில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் .
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பெரியவர்கள் நிலவேம்பு குடிநீர் , கபசுரக்குடிநீர் 60 மி.லியும்,குழந்தைகள் 30 மி.லியும் வாரத்திற்கு மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உரை மாத்திரையை 6 மாதம் முதல் 5 வயது வரையும், 5 வயதிற்கு மேல் நெல்லிக்காய் லேகியமும் கொடுக்க வேண்டும் .
மேலும் லேசான அறிகுறிகள் இருக்கும் பொழுது சித்த மருத்துவ மருந்துகளான உரை மாத்திரை, ஆடாதோடை, மணப்பாகு ஆடாதோடை குடிநீர் ,நொச்சி குடிநீர்,பால சஞ்சீவி மாத்திரை போன்றவற்றை சித்த மருத்துவர்களின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும் என பேசினார்.
செவியியர் சுபஸ்ரீ கை கழுவும் முறை குறித்து பொதுமக்களிடம் விளக்கிப் பேசினார்.
மருத்துவப் பணியாளர்கள் சிவசாமி,காயத்ரி ஆகியோர் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள்,கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.
இவ்வாறு பரம்பூரை சுற்றியுள்ள பொது இடங்கள் மற்றும் வயல்வெளிகளில் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய சித்த மருத்துவர் சுயமரியாதை மற்றும் பரம்பூர் ஆரம்ப சுகாதார மருத்துவப் பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.