ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் திருச்சி மாவட்ட வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் தடகள வீரர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 3 பேர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன் மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆவர். தடகளத்தில் திருச்சி வீரர்-வீராங்கனைகள் வெற்றி பதக்கங்களை வெல்லும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி காவேரி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

நலச்சங்க தலைவர் ஜெயபால் தலைமை தாங்கி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். செயலாளர் செந்தில்குமார் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் மற்றும் பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில்,
“இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பது மிகவும் குறைவு. ஆனால் இந்த முறை திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டும் 3 பேர் தடகள போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளார்கள் .
அவர்கள் வெற்றி வாகை சூடி பதக்கம் வெல்ல, பொது மக்களாகிய நாம் எந்த அளவு உற்சாகப்படுத்துகிறமோ அந்த அளவுக்கு நமது மாவட்டத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பார்கள். விளையாட்டு வீரர்களுக்கு இன்று உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கும் கோட்டா இருக்கிறது.
எனவே, தன்னம்பிக்கையோடு விளையாட்டில் ஆர்வமுடன் விளையாண்டால் வெற்றி பெறலாம்” என்றனர்.