கொரோனா தொற்று காரணமாக அமாவாசை நாளான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் இன்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், தர்ப்பணம் செய்வார்கள்.
பின்னர் ராமநாதசுவாமியை தரிசித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கடைசியாக தை அமாவாசை நாளன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா தொற்று தளர்வுகள் அளித்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வந்ததை அடுத்து
தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தளர்வுகளற்ற பொது முடக்கம் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், வைகாசி அமாவாசை நாளான இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் ஒருசில வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி பூட்டிக்கிடக்கும் ராமநாதசுவாமி திருக்கோயில் நுழைவு வாயில் முன்பாக நின்று வழிபட்டு சென்றனர்.