முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், மதுப்பிரியர்கள் பக்கத்து மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை ரெயில்கள் மூலம் தமிழகத்துக்கு கடத்தி வருவதாக புகார்கள் வந்தது.
இதையடுத்து ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்புப்படையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் சிவநேசன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதிகாலை ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று நடைமேடை எண் 3-ல் வந்து நின்றது.
அப்போது அதில் இருந்து இறங்கிய வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் விசாரித்தனர்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்த போலீசார், அவரை சோதனை செய்தனர்.
அப்போது அவரது இடுப்பில் எதையோ கட்டி கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. அவரது சட்டையை கழற்ற செய்து பார்த்தபோது, இடுப்பில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டு்களை துணியால் சுற்றி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதில் ஒரு கட்டில் 200 எண்ணிக்கையில் 2,000 ரூபாய் என 7 கட்டுகள் இருந்தது.
இது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த கோணகந்தியா சந்திரசேகர் (வயது 21) என்பது தெரியவந்தது. மேலும்,
அவர் குண்டூரில் ஒரு நகைக்கடையில் வேலை செய்வதாகவும், சென்னையில் குமார் என்பவரிடம் இந்த பணத்தை கொடுக்க வந்ததாகவும், பணத்தை கொடுத்ததும் அவர் ரெயில் டிக்கெட் கொடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த ரெயில் டிக்கெட் மூலம் மீண்டும் குண்டூர் செல்ல இருப்பதாகவும், அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், நேற்று முன்தினமும் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு ரெயிலில் வந்து சென்றதுக்கான டிக்கெட்டும் அவரிடம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள், 7 கட்டுகளில் இருந்த ரூ.28 லட்சத்தை பறிமுதல் செய்து, அந்த பணம் தொடர்பாக அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாலிபர் ஒருவர் இடுப்பில் துணியால் சுற்றிக்கொண்டு கட்டுக்கட்டாக கொண்டு வந்த பணத்துடன் போலீசிடம் சிக்கிக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.