கொரோனா பேரிடர் காலத்தில் பாஜக ஆளும் மாநிலங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை வகித்தார். மாநில பொருளாளர் ஷபியுல்லா கான் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் அஷ்ரப், மாவட்ட நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கொண்டு ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட தலைவர் முகமது ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்து குடியேறி வசித்து வரும் முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டும் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று அபாயம் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற மத்திய மோடி அரசு முன்வந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
அதனால் மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சந்தித்துள்ள படு தோல்வியை மறைப்பதற்காக இந்த மதவாத சட்டத்தை நடைமுறைப்படுத்தி, குழப்பத்தை ஏற்படுத்தி, பிரச்சினையை திசை திருப்ப முயல்கிறது என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக திருச்சி மாவட்ட துணை செயலாளர் ஷரிப் மற்றும் சம்சுதீன், இம்ரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.