பாலியல் புகார் கூறப்பட்ட பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது மாணவிகள் உரிய ஆதாரங்களுடன் புகார் கொடுக்கும் பட்சத்தில் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னை பத்மசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், கராத்தே பயிற்சி மாஸ்டர் கெபிராஜ் மற்றும் பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகரிஷி வித்யா மந்தீர் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால் அவரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி புகார் கொடுக்க மறுத்து விட்டதால், அவர் மீது போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்கலாம் என்று அவரது செல்போன் நம்பர் கொடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த ஒரு வாரத்தில் துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்-அப் வாயிலாக 100 புகார்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ளன. அவற்றில் 22 புகார்கள் சென்னையில் இருந்து வந்தவை ஆகும்.
இந்த புகார்களில் உரிய ஆதாரங்கள் இல்லாதவை குழந்தைகள் நல ஆணையத்தின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் சென்னையில் சில பள்ளி-கல்லூரிகள் குழந்தைகள் நல ஆணையத்தின் விசாரணை வளையத்தில் உள்ளன. குழந்தைகள் நல ஆணையம் கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் குறிப்பிட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மீது போலீஸ் நடவடிக்கை பாயும்.
நேரடியாக உரிய ஆதாரங்களுடன் வந்த புகார்கள் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பாலியல் புயல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.