கருப்பு பூஞ்சை நோய்க்கு இந்தியாவில் மருந்து தயாரிப்பு தொடக்கம். மத்திய மந்திரி அலுவலக அதிகாரிகள் தகவல்.
மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள ஜெனட்டிக் லைப் சயின்ஸ் நிறுவனம், ஆம்போடெரிசின்-பி ஊசி மருந்தை தயாரிக்க தொடங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் ஒருபுறம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் கருப்பு பூஞ்சை எனும் புதிய தொற்று நோய் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோயாளிகள் மற்றும் கொரோனாவில் இருந்து மீளும் நோயாளிகளை கருப்பு பூஞ்சை வெகுவாக பாதிக்கிறது.
மூக்கு, கண்கள், சைனஸ்கள் மற்றும் சில நேரங்களில் மூளைக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க ஆம்போடெரிசின்-பி என்ற ஊசி மருந்து பயன்படுத்தப்படுகிறது.
கருப்புப் பூஞ்சை நோய் தாக்கம் மற்றும் இந்த நோய்க்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆம்போடெரிசின்-பி மருந்தின் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, ஆம்போடெரிசின் பி ஊசி மருந்து உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மருந்து தயாரிப்பதற்காக 5 நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள ஜெனட்டிக் லைப் சயின்ஸ் நிறுவனம், ஆம்போடெரிசின் பி ஊசி மருந்தை தயாரிக்க தொடங்கி உள்ளதாகவும், வரும் திங்கள்கிழமை முதல் இந்த தடுப்பூசி விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விலை 1200 எனவும், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகில் எங்கு இந்த தடுப்பூசி கிடைத்தாலும் வாங்கி அனுப்ப, தூதரகங்களுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் அமெரிக்காவில் ஒரு நிறுவனம் இருப்பதை அறிந்து, அங்கிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை 1,21,000 குப்பிகள் இந்தியா வந்து உள்ளதாகவும், மேலும் 85,000 குப்பிகள் ஓரிரு நாளில் வந்து சேரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
10 லட்சம் குப்பிகளை அந்த நிறுவனம் அனுப்ப உள்ளதாகவும் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.