குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த நடிகை மீனாவின் 40 வருட திரைப் பயணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
நடிகை மீனா 1981-ல் மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் 1990-ல் ஒரு புதிய கதை படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகமாகி கொடி கட்டி பறந்தார். அனைத்து பெரிய ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தார்.
திருமணத்துக்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக மலையாளத்தில் திரிஷ்யம் 2 படம் வந்தது.
மீனா சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவர் நடித்த முக்கிய படங்களின் காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பை வெளியிட்டு உள்ளார்.
அவர் கூறும்போது, ‘1981-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 40 வருடங்களாக சினிமாவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக கதாநாயகர்கள், சக கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி.
எனது குடும்பத்தினர் உற்சாகப்படுத்தினர். அனைவரின் ஆதரவு இல்லாமல் இத்தனை காலம் சினிமாவில் நீடித்து இருக்க முடியாது.
எனது சினிமா பயணத்துக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது இதயத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.