கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.
சரியான நேரத்தில் சிகிச்சை பெறாதவர்களின் உயிரையும் பறித்துவிடுகிறது கொரோனா.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்தாலும் கூட மூளை, கண், இதயம், கல்லீரல், சிறுநீரகம் என உடலின் உள் உறுப்புகள் அனைத்திலும் அது ஏற்படுத்திய பாதிப்பு பல்வேறு பின் விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று காரணமாக உடல் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை அறிந்துள்ளோம். கொரோனா காரணமாக வேலை, வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்கள், அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள், சிகிச்சையின் போது சந்தித்த பிரச்னைகள் என மனதும் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
உடல், மனம் என இரண்டும் பாதிக்கப்பட்ட நிலையில்,
ஒருவரின் பாலியல் வாழ்க்கையையும் பாதித்திருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்ட ஆணின் விரைப்புத் தன்மை வழக்கத்தை விட ஆறு மடங்கு வரை குறைந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆண்களுக்கு விரைப்புத் தன்மை செயல் திறன் குறைபாடு (erectile dysfunction) ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மியாமியில் உள்ள மில்லர் ஸ்கூல் ஆஃப் மெடிசன் அமெரிக்காவில் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளான ஆண்களின் விரைப்புத் தன்மை குறைபாடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குப் பிறகு ஏழு மாதங்கள் வரையில் அவர்கள் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று நடத்திய ஆய்வில் விரைப்புத் தன்மை பிரச்னை இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தியர்கள் மத்தியில் பாலியல் நலம் என்பது உடல் நலம், மனம் நலம், உணர்வுகள், சமூகம், ஆன்மிகம் தாக்கம் என அனைத்தும் சார்ந்ததாக உள்ளது.
இதனால் இதைப் பற்றி இந்தியர்கள் அதிகம் பேசத் தயங்குகின்றனர். அதே நேரத்தில் பல ஆய்வுகள் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குருகிராமைச் சேர்ந்த ஆண்ட்ராலஜி மற்றும் சிறுநீரகவியல் மருத்துவர் ராமன் திவாரி கூறுகையில்,
“கோவிட் ஆண்களுக்கு விரைப்புத் தன்மை பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. கோவிட் தொற்று காரணமாக ஆண் இனப்பெருக்க மண்டலத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் ஒருவித படிமம் படிந்துள்ளது.
இது ரத்த நாளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி, விரைப்புத் தன்மை குறைபாட்டை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு எல்லோருக்கும் இருக்கும் என்று கூற முடியாது.
அதே நேரத்தில் கொரோனா பாஸிடிவ் வந்த பிறகு, அதில் இருந்து மீண்டவர்கள் தாம்பத்திய வாழ்க்கையில் குறைபாடு இருப்பதை உணர்ந்தால் உடனடியாக ஆண்ட்ராலஜி மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது” என்றார்.