திருச்சியில் தனிமைப் படுத்தப்பட்ட
பகுதிகள் எண்ணிக்கை உயரவில்லை
மாநகரில் 42
புறநகரில் 23 பகுதிகள்.
திருச்சியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், பொதுமுடக்கம் காரணமாக, தனிமைப்படுத்தப்படும் பகுதிகளின் எண்ணிக்கை உயரவில்லை 65 ஆகவே உள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா 2 ஆவது அலையில் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது.
திருச்சி மாவட்டத்தை பொறுத்த மட்டில் இந்த வாரத்தின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை, கொரோனா சோதனை மேற்கொண்டவர்களில் 813 பேர் பாதிப்புக்கு உள்ளானதாக சோதனையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அடுத்த நாள்களில் திங்கள் 869 பேர், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தலா 879, வியாழன் 940, வெள்ளிக்கிழமை … பேர் என மொத்தம் 33,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தவிர 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்ட சுகாதாரத்துறை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகமாக கரோனா தொற்றுக்கு உள்ளானோர் வசிக்கும் பகுதிகளை தனிமை பகுதிகளாக அறிவித்து அவற்றை தடுப்புகள் அமைத்து மூடி வேறு யாரும் அங்கு செல்லாத வகையிலும்,
அங்கிருப்போரும் வெளியே செல்லாத வகையிலும் கொரோனா தொற்று பரவாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றது. அந்த வகையில் இதுவரையில் திருச்சி மாநகரில் 42 பகுதிகளும், புறநகரில் 23 பகுதிகளும் என மொத்தம் 65 பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டுள்ளதாலும், அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியே செல்வோர் தவிர மற்றவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனால் கொரோனா பரவலால் தடைசெய்யப்படும் மற்றும் தனிமைப் படுத்தப்படும் பகுதிகளின் எண்ணிக்கை உயரவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்வதாக கூறிக்கொண்டு ஊர் சுற்றுவோரின் எண்ணிக்கையை மேலும் குறைத்தால் இன்னும் கரோனா பரவலை தடுக்க முடியும். ஆனால், போலீசாரை ஏமாற்றி,
பல்வேறு வகையான பொய்களைக் கூறிக்கொண்டு, காலை நேரங்களில் ஊர் சுற்றுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துதான் காணப்படுகின்றது. பொதுமக்களை பொறுப்புடன் செயல்பட்டால் கொரோனா பரவலை விரைவில் தடுக்கமுடியும் என்பது அனைத்து தரப்பினரின் கருத்தாக உள்ளது.