திருச்சி அருகே உள்ள திருவெறும்புர் சட்டமன்ற தொகுதியில், அந்த பகுதியைச் சேர்ந்த மென் பொறியாளர் ஒருவர் ‘சர்க்கார்’ படப்பாணியில் ’49 P’ சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் அபுதாபியில் பொறியாளராக உள்ளார். இவர் தனது வாக்கினை செலுத்துவதற்காகவே, அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் இன்று தனது வாக்கினை செலுத்த திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார்கோட்டை வாக்குச்சாவடிகுக சென்றபோது, அவரது வாக்கு ஏற்கனவே பதிவாகி இருப்பதாக கூறப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், தான் இன்னும் வாக்களிக்கவில்லை என்பதை நிரூபித்தார். விசாரணையில், ரமேஷ் பெயரிலான போலியான ஆதார் அட்டையைக் காட்டி மர்மநபர் வாக்கினை செலுத்தியிருப்பது தெரிய வந்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் 1961 தேர்தல் நடத்தை விதிகளின் பிரிவு 49 பி இன் கீழ் ஒரு டெண்டர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, தனது ஆவணங்களை காண்பித்து, தனது வாக்கை வாக்குச்சீட்டு மூலமாக செலுத்தினார். சர்க்கார் படத்தில் 49பி சட்டப்பிரிவை காட்டி, இதுபோன்று வாக்களிக்கலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அதை பின்பற்றி ரமேஷ் தனது வாக்கினை, வாக்குச்சீட்டு மூலம் பதிவு செய்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.