Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா. பொதுமக்கள் அச்சம்.

0

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்துக்குள் நுழைந்து ஒரு ஆண்டை கடந்து விட்டது. ஆனாலும் தொற்று முழுமையாக குறைந்தபாடில்லை. கடந்த ஆண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். பெரும்பாலானவர்கள் வருமானமின்றி பொருளாதார ரீதியாக அவதிக்குள்ளானார்கள்.

அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதும், ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைவாக காணப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கும் இயல்பு வாழ்க்கையை நோக்கி திரும்பினார்கள்.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மெதுவாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் ஏற்படும் புதிய பாதிப்பு எண்ணிக்கை 500-க்கும் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 10 நாட்களாக படிப்படியாக நோய்த் தொற்றின் அளவு உயர்ந்து, தற்போது 1.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் 2 சதவீதத்திற்கு சற்று மேலாகவும், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களில் 1 சதவீதத்திற்கு மேலாகவும் பதிவாக தொடங்கி உள்ளது.

மேலும், சுமார் 65 ஆயிரம் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளில் உறுதி செய்யப்படும் நோய்த் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது மீண்டும் நாளொன்றுக்கு நோய்த் தொற்று 800 பேரை தாண்டி இருக்கிறது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நோய் பரவலை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுஇடங்களில் செல்பவர்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மேலும், பொதுமக்களை பொறுத்தவரை பொது இடங்களில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து, அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து சுகாதாரம் பேண வேண்டும். ஏதாவது நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் காலதாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளை அணுகி இதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, தேவையான சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.