Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கொரோனா தொற்று அதிகரிப்பு ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடு. மீறினால் மூடப்படும்.

0

கொரோனா தொற்றுகளால் இந்தியாவில் மராட்டியம் பாதிப்பு எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது.

இதுதவிர, மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

மராட்டியத்தின் மும்பை நகரில் நேற்று ஒரே நாளில் 1,712 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. 4 பேர் உயிரிழந்து உள்ளனர். அதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,535 ஆக உயர்ந்து காணப்படுகிறது.

1,063 பேர் குணமடைந்த நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,18,642 ஆக உயர்ந்து உள்ளது. 14,582 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று,

மராட்டியத்தில் 15,051 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 23,29,464 ஆக உயர்ந்து உள்ளது.

இதனை முன்னிட்டு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தடுப்பூசி போடும் பணிகள் உள்பட தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படி அரசு நிர்வாகமும் மக்களை வலியுறுத்தி வருகிறது.

மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்துவது என்று அரசு முடிவு செய்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதேபோன்று, நாக்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் வருகிற 21ந்தேதி வரை ஒரு வார கால ஊரடங்கு உத்தரவு அமலாகி உள்ளது.

ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளான பால் பூத், காய்கறி, பழம் மற்றும் மருந்து கடைகள் போன்றவை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டன.

பொதுமக்களும் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை.

இதனால் வாகன போக்குவரத்து முடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஒரு வார கால ஊரடங்கை முன்னிட்டு நாக்பூர் முழுவதும் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் வெளியே வருவோரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் போலீசார் காரணங்களை கேட்டறிந்த பின்னரே செல்வதற்கு அனுமதி வழங்குகின்றனர்.

இவை தவிர அமராவதி, யவத்மல் மற்றும் லத்தூர் போன்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் முன்பே விதிக்கப்பட்டு விட்டன.

கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பினை முன்னிட்டு மராட்டியத்தில் திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை கொரோனா தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த விதிகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டால், பின்னர் கொரோனா பெருந்தொற்று காலம் முழுவதும் அவை மூடப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திரையரங்குகள் (ஒற்றை திரை மற்றும் மல்டிபிளெக்ஸ்) மற்றும் ஓட்டல்கள் 50 சதவீத அளவுக்கு இடங்களை நிரப்பி கொள்ள அனுமதியும், சமூக, அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.

திருமண சடங்குகளுக்கு 50 பேர், இறுதி சடங்குகளுக்கு 20 பேர் அனுமதிக்கப்படுவர்.

சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பணிகளை தவிர பிற அனைத்து அலுவலகங்களிலும் 50 சதவீதம் அளவுக்கே ஊழியர்கள் பணியாற்ற அனுமதி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டு உள்ளது. வீட்டில் இருந்து பணியாற்றவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.