காரைக்கால் மாவட்டம் திரு-பட்டினம் தொகுதிக்கு உட்பட்டது பட்டினச்சேரி மீனவர் கிராமம்.
இங்கு சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும், மீனவர்களை பிரிக்கும் வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட சிவப்பு, மஞ்சள் நிற ரேஷன் அட்டைகளை நீக்கி, அனைவருக்கும் சிவப்பு நிற ரேஷன் அட்டை வழங்க வேண்டும்.
நிரந்தர வருமானமின்றி இருக்கும் மீனவர்களிடம் வருமான வரி சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும்,
தொண்டு நிறுவனம் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்ட ஐஸ் பிளாண்டை மீனவர்கள் பயன்பாட்டுக்காக உடனே திறக்க வேண்டும். கிராமத்தில் சாலை வசதி, குடிநீர்தொட்டி, கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்டவற்றை செய்து தரவேண்டும்.
கல்வி வேலை வாய்ப்புகளில் மீனவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும்.
கடலில் மீன் பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவர் குடும்பத்துக்கு ஓராண்டுக்குள் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தநிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வருகிற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
கிராம பஞ்சாயத்தார் சார்பில் இது பற்றிய அறிவிப்பு கிராமத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.