மக்களோடு மக்களாக தனியார் பஸ்சில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்து குறைகளை கேட்டார்.
பஸ்சில் பயணம்
புதுவையில் சாலை, பஸ் வசதி சரியில்லை என்பன உள்பட பல்வேறு குறைகள் குறித்து கவர்னர் மாளிகைக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதுதொடர்பாக ஆய்வு செய்ய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முடிவு செய்தார்.
இதையடுத்து நேற்று காலை 10.40 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து காரில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை பகுதிக்கு அவர் வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாகூர் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி முன் இருக்கையில் அமர்ந்தார்.
கவர்னருடன் அவரது ஆலோசகர் ஏ.பி.மகேஸ்வரி, சிறப்பு செயலாளர் சுந்தரேசன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். பஸ்சில் அமர்ந்துகொண்டே அவர் சாலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
அதுமட்டுமின்றி பஸ்சில் பயணம் செய்த பயணிகளிடம் குறைகளைகேட்டார். அப்போது மூதாட்டி ஒருவர் தனக்கு முதியோர் பென்ஷன் கிடைக்கவில்லை என்றார். சிலர் அபிசேகப்பாக்கம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை சரியில்லை என்று தெரிவித்தனர்.
தவளக்குப்பம் வந்ததும் பஸ்சை விட்டு இறங்கிய தமிழிசை சவுந்தரராஜன் மற்றொரு பஸ்சில் ஏறி அபிசேகப்பாக்கம் சென்றார். அங்கிருந்து கார் மூலம் சுடுகாட்டுப் பாதையில் சென்று பார்த்தார். அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது.
அதன்பின் அபிசேகப்பாக்கம் வந்து அங்கிருந்து மீண்டும் தனியார் பஸ் மூலம் மரப்பாலம் சந்திப்புக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் ஏறி கவர்னர் மாளிகைக்குச் சென்றார்.
தனியார் பஸ்சில் பயணம் செய்த போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், டிரைவர், கண்டக்டர்களின் செயல்பாடுகள் குறித்து அவர்களிடம் விசாரித்தார். ஓடும் பஸ்சில் பொதுமக்கள் கவர்னருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிலர் ஆட்டோகிராப் வாங்கினர்.
தவளக்குப்பம் வந்து இறங்கிய கவர்னருக்கு பா.ஜ.க. மகளிர் அணியினர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
மக்களோடு மக்களாக…
பஸ்சில் சென்று ஆய்வு செய்தது தொடர்பாக நிருபர்களிடம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
கடலூர் சாலையில் பயணம் செய்வது தொடர்பான குறைகளை மக்கள் நேரிலும், வாட்ஸ்-அப் மூலமும் புகார் தெரிவித்தனர். அதுகுறித்து நேரில் அறிந்துகொள்ள மக்களோடு மக்களாக பஸ்சில் செல்ல முடிவெடுத்து தனியார் பஸ்சில் பயணம் செய்தேன்.
அப்போது பஸ்சில் இருந்த பொதுமக்களும் சில குறைகளை தெரிவித்தனர். சில இடங்களை நேரில் சென்றும் பார்வையிட்டேன்.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் புதியதாக எதையும் செய்ய முடியாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களின் மனநிலை
மக்களின் மனநிலையை நேரடியாக அறிந்து கொள்வதற்கு இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தேர்தல் முடிந்ததும் குறைகள் அனைத்தும் சரிசெய்யப்படும். இப்போது அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து திட்டங்கள் தயார் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.