Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு வினியோகிக்கப்பட்டு வருகிறது. விருப்ப மனு வினியோகம் 3-ந்தேதியுடன் முடிவடைந்தது.

அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ் மகன் உசேன், செய்தி தொடர்பாளர் பா.வளர்மதி, மருத்துவரணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் உள்பட நிர்வாகிகள் அடங்கிய ஆட்சி மன்ற குழு, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுடன் நேர்காணல் நடத்தியது.

8200 பேரை 15 பிரிவுகளாக பிரித்து நேர்காணல் நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த நேர்காணல் இரவு 8.30 மணிக்கு முடிவடைந்தது.

அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஆட்சி மன்றக்குழு நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

வேட்பாளர் நேர்காணல் நிகழ்வு முடிந்தநிலையில், விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவுபெற்ற உடனேயே அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறப்படுகிறது.

அ.தி.மு.க. வரலாற்றிலேயே ஒரே நாளில் கட்சி ரீதியான உள்ளடங்கிய அனைத்து மாவட்டங்களுக்கும் அதாவது அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு நடத்தி முடித்தது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் நேர்காணல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சட்டமன்ற தேர்தல் தேதி திடீரென அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைவருக்கும் ஒரே நாளில் நேர்காணல் நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஏராளமானோர் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் வாய்ப்பு ஒருவருக்குத்தான் வழங்கப்படும். எனவே கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை ஒருமித்த ஆதரவுடன், ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியடைய செய்யவேண்டும்.

இந்த தேர்தலில் வெற்றிபெற்றால் அ.தி.மு.க.வை எதிர்க்கும் சக்தி எந்த அரசியல் கட்சிகளுக்கும் இல்லை. ஏனெனில் பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களிடையே நாம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளோம்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் ரத்து, சுய உதவிக்குழு கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை செய்துள்ளோம். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு திட்டத்தால் இன்று அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. அதனை முறியடித்து ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி வந்திருக்கிறோம்.

ஜெயலலிதா ஆட்சி நல்லமுறையில் நடந்து வருகிறது. எனவே இந்த தேர்தலில் நாம் ஒன்றிணைந்து பணியாற்றி தேர்தல் வெற்றியை அடையவேண்டும். வெற்றி மட்டுமே இலக்கு, அதை நோக்கியே நம் பயணம் இருக்கவேண்டும் என கூறினார்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது:

அதில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 4 அமைச்சர்கள்இடம் பெற்று உள்ளனர்.

முதல் கட்ட பட்டியல்

போடிநாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி
ராயபுரம் – ஜெயக்குமார்
விழுப்புரம் – சி.வி.சண்முகம்
ஸ்ரீவைகுண்டம் – சண்முகநாதன்
நிலக்கோட்டை – தேன்மொழி.

முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.