பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அவற்றின் மீதான வரியை குறைப்பதற்கு மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத விலை ஏற்றத்தால் மக்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.
கடந்த 10 மாதங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளால், பெட்ரோல் மற்றும் டீசல் உச்சத்தை தொட்டுள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டர் 94 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.
ஆனாலும் மத்திய அரசு நினைத்தால் விலையை குறைக்க முடியும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து
எப்படி என்றால் இந்தியாவில் எரிபொருளுக்கு மத்திய அரசு விதிக்கும் வரி அதிகம். அதனை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
எனவே அந்த அதிக வரி விதிப்பை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் பலரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.
முன்னதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குளிர் காலத்திற்கு பிறகு பெட்ரோல் விலை குறையும் என கூறியிருந்தார். அதற்கு ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் வருகிறதே என்றும் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இந்நிலையில் மத்திய அரசு விலை குறைக்கும் நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.