மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சியில் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவக்கி வைத்தார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டில் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி திருச்சியில் துவங்கியது.
திருச்சி, மன்னார்புரம் பகுதியில் உள்ள ஐ டெஸ்டினி (I Destiny) பேட்மிட்டன் அசோசியேஷன் வளாகத்தில் நடைபெற்ற பூப்பந்தாட்ட போட்டியை, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவக்கி வைத்தார்.
முன்னதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் அவரது மகன் ஜவகர்லால் நேரு ஆகியோர் பூப்பந்தாட்டத்தை விளையாடி, வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்.
இன்று துவங்கிய இப்போட்டிகள் வருகிற 28ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெறுகிறது.
இதில் 11 வயதிற்குட்பட்டோர் முதல் முதியோர் (42 வயது) வரை என 12 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் ஆன போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை தக்கவைப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
முதல் நாளான இன்று 11, 13, 15 வயதிற்குட்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர்.
போட்டி ஏற்பாடுகளை ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், முத்துக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
போட்டிக்கு நடுவர்களாக நாக செல்வம், நவீன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட துணை செயலாளர் வனிதா, மகளிர் அணி மாவட்ட செயலாளர் தமிழரசி சுப்பையா பாண்டியன், பகுதி செயலாளர்கள் கருமண்டபம் ஞானசேகர், ஏர்போர்ட் விஜி, வர்த்தக அணி மாவட்ட துணை செயலாளர் டிபன் கடை கார்த்திகேயன், சிந்தை முத்துக்குமார், மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்