திருச்சிக்கு துக்க நிகழ்ச்சிக்கு வந்த மதுரை பெண் மீது அரசு பஸ் சக்கரம் ஏறி நசுக்கியதால் உயிரிழந்தார்.
*துக்கம் விசாரிக்க வந்த பெண்*
மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆளவந்தான் இந்திராநகரை சேர்ந்தவர் கண்ணன்.இவரது மனைவி ரோகிணி(வயது 60). இத்தம்பதிக்கு ராமஜெயம் என்ற ஒரே மகள் உள்ளார். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து கண்ணன் சென்று விட்டார்.
ரோகிணி பராமரிப்பில் இருந்த மகள் ராமஜெயத்தை திருச்சி தாராநல்லூரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
இந்த நிலையில் மருமகன் கிருஷ்ணனின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார்.
இறந்தவர் துக்க நிகழ்ச்சிக்காக நேற்று அதிகாலை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திலில் இருந்து அரசு பஸ்சில் ஏறிய ரோகிணி நேற்று காலை ( செவ்வாய்) 7.30 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார்.
*பஸ் சக்கரம் ஏறி இறங்கியது*
பின்னர் அந்த பஸ்சில் இருந்து முன்படிக்கட்டு வழியாக இறங்கி முன்னோக்கி நடந்து சென்றார். பஸ்சின் டிரைவர் அதை கவனிக்காமல் பஸ்சை முன்நோக்கி நகர்த்தினார். அப்போது பஸ் இடித்து கீழே தள்ளியதில் கீழே விழுந்த ரோகிணியின் இடுப்பு மீது பஸ்சின் முன் சக்கரம் ஏறி இறங்கி நசுக்கியது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மதியம் 1.15 மணிக்கு ரோகிணி உயிரிழந்தார்.
விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்ட்ர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அஜாக்ரதையாக பஸ்சை ஓட்டி விபத்துக்கு காரணமான அரசு பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
துக்கம் விசாரிக்க வந்த பெண், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அக்குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.