சதுரகிரி கோவிலுக்கு 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை, கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தை அமாவாசை வருகிற 11-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இதனால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வருகிற 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தை அமாவாசைக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.