ரஜினியின் புதிய கட்சி பதிவு : ஆட்டோ சின்னம் ஒதுக்கப்படுமா?…..
ரஜினியின் புதிய கட்சி பதிவு : ஆட்டோ சின்னம் ஒதுக்கப்படுமா?.....
நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சியை இன்று பதிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக வழக்கறிஞர்களுடன் ரஜினிகாந்த் மன்றத்தின் நிர்வாகிகள் டெல்லி விரைந்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலின்போது அரசியலுக்கு வந்து தனிக்கட்சி துவங்குவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் இரண்டு வருடங்கள் முன்பே அறிவித்து இருந்தார்.
ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக அவர் அரசியலுக்கு வருவாரா என்ற சந்தேகம் இருந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் ஜனவரி மாதம் கட்சி துவங்கப்படும் என்றும் டுவிட்டர் வாயிலாக அவர் அறிவித்தார்.
இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் டிசம்பர் 12ஆம் தேதி நாளை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி டிசம்பர் 11ஆம் தேதியான இன்று, வெள்ளிக்கிழமை ரஜினிகாந்த் கட்சியை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக ரஜினிகாந்த் மன்ற நிர்வாகிகள் சிலர், மூத்த வழக்கறிஞர்களுடன் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன் மூர்த்தி, தமிழருவி மணியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ரஜினிகாந்துடன் ஆலோசனை நடத்தி இருந்தனர்.
அப்போது இந்தத் திட்டம் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கட்சியை பதிவு செய்யும்போது அதன் பெயர் என்ன என்ற விவரம் மக்களுக்கு தெரியவரும்.
இந்த பெயரை தேர்வு செய்தது ரஜினிகாந்த் என்று கூறப்படுகிறது.
தேர்தல் கமிஷனில் இன்று கட்சி பெயரை பதிவு செய்ததும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் கொடி ஆகியவை தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. கட்சிக் கொடியில் வெள்ளை நிறம் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது. அதேநேரம் கட்சி சின்னமாக ஆட்டோ அல்லது மண்வெட்டி பதிவு செய்யப்படும் என தெரிகிறது.
பெயரை பதிவு செய்ததும் ஒவ்வொரு ஊராக ரஜினி கட்சியை பிரபலப்படுத்த அவரது கட்சியினர் தயார் நிலையில் உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருப்பதால், இப்போது இருந்தே வேகத்தை கூட்டி மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்,
நடிகர் ரஜினிகாந்த், திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.