Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முகக் கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை : கலெக்டர்களுக்கு தலைமைச்செயலாளர் அறிவுறுத்தல்.

முகக் கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை : கலெக்டர்களுக்கு தலைமைச்செயலாளர் அறிவுறுத்தல்.

0

முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை : மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பது:

தினந்தோறும் கொரோனாவுக்கு பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அனைத்து மாவட்டங்களும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சென்னை, கோவை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஈரோடு மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

கொரோனா பரிசோதனை செய்யும் அளவு ஒருபோதும் குறையக்கூடாது. 100 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டால் அதில் எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது என்ற ‘பாசிடிவிடி ரேட்’ 2 சதவீதத்துக்கும் குறைவாக கொண்டு வர செயலாற்ற வேண்டும்.

நமது மாநிலத்தில் 30 சதவீதத்துக்கும் குறைவான நபர்களே முக கவசம் அணிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாத குறிப்பாக முக கவசம் அணியாத தனிநபர், திருமண மண்டபத்தின் உரிமையாளர், திருமணத்தை நடத்துபவர்களுக்கு அபராதம் விதியுங்கள். தேவைப்பட்டால் கண்டிப்பான நடவடிக்கையும் எடுங்கள்.

வணிக வளாகங்கள், பணி செய்யும் இடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கடைகளுக்கு அதன் உரிமையாளர்களை பொறுப்பாக நிர்ணயிக்கவேண்டும். இந்த இடங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். விழாக்காலங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாததால் தேவையில்லாமல் ஏற்படும் நோய் பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மழைக்காலம் மற்றும் அதனைதொடர்ந்து வரும் குளிர்காலத்தில் நோய் தொற்று அதிகரித்தால், சில மாநிலங்களை போன்று அதனை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதை கலெக்டர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தகுந்த நடவடிக்கைகளை இப்போது எடுக்கவில்லை என்றால், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் வீணாகிவிடும்.

அதனால் நோய் தடுப்பு முறைகள் பொது இடங்கள், பணி இடங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்படுகிறதா? என்று கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும். நோய் தடுப்பு முறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் அபராதம் விதிக்கப்பட வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்புடன் பின்பற்றி கொரோனா பரவல் சங்கிலியை உடைத்து எறிந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாதிரி மாநிலம் என்ற அந்தஸ்தை பெறுவதை கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.