புரேவி புயலுக்கு பிறகு வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தம் ஒரு வேளை புயலாக மாறினால் அதற்கு டாக்டே (Tauktae) என பெயரிடப்பட்டுள்ளது.
அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தம் புயலாக மாறுமா என்பது தற்போது தெரியவில்லை. எந்த புயலாக இருந்தாலும் சேதத்தை குறைத்து கொண்டு மழையில்லாத மக்களுக்கு மழையை மட்டும் கொடுக்க வேண்டும்.
நிஷா, நீலம், தானே, வர்தா, கஜா, ஒக்கி, ஆம்பன், நிசர்கா, கடி, நிவர் என புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை பற்றி பார்ப்போம்.
வங்கக் கடல், அரபிக் கடல்களில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்கு வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் ஆகிய 13 நாடுகள் பெயர் வைத்து வருகின்றன.
ஒவ்வொரு நாடும் 13 பெயர்கள் என மொத்தம் 169 பெயர்களை வழங்கும். புயல்களுக்கு இந்த 13 நாடுகளும் பரிந்துரைக்கும் பெயர்களை அங்கீகரிக்க ஒரு குழு உள்ளது. அந்த குழுதான் இந்த 13 நாடுகளின் அகரவரிசைப்படி , அவை பரிந்துரைத்த பெயர்களை பட்டியலிடும். வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர் என அகரவரிசை போய் கொண்டே இருக்கும்.
இன்னும் 25 ஆண்டுகளுக்கு உருவாகும் புயல்களுக்கும் தற்போதே பெயர் தயார் நிலையில் உள்ளது.
வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயர் பட்டியலில் 3-ஆவது உள்ள பெயர்தான் நிவர். இந்த பெயரை ஈரான் பரிந்துரைத்தது. ஆம்பன் புயலுக்கு தாய்லாந்து வைத்தது. கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியிட்ட புயல் பெயர்களின் பட்டியலில் கடைசி பெயர் ஆம்பன்.
அது போல் புதிதாக உருவாகும் புரேவி புயலுக்கு மாலத்தீவு பெயரிட்டுள்ளது. அடுத்ததாக தாக்டே (Tauktae) புயலுக்கு மியான்மரும், யாஸ் புயலுக்கு ஓமனும், குலாப் புயலுக்கு பாகிஸ்தானும் பெயரிட்டுள்ளது. வரும் 29-ஆம் தேதி புரேவி புயல் உருவாகிறது.
இதைத் தொடர்ந்து டிசம்பர் 4-ஆம் தேதி வங்கக் கடலில் அந்தமானுக்கு அருகே ஒரு புயல் உருவாகிறது. அந்த புயலுக்கு தாக்டே என பெயரிடப்படும்.
புரேவிக்கு அடுத்த வரிசையில் தாக்டேதான் உள்ளது. இந்த பெயரை மியான்மர் வைத்துள்ளது. இந்த புயல் எங்கு செல்லும் என இதுவரை கண்டுபிடிக்கவில்லை.