இந்தப் புளிப்பு, புது அனுபவம்: மாங்காய் ரசம் செய்து பாருங்க!
சிம்பிளான ஒரு உணவுப் பொருள்; ஆனால் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காது. உடல் நலனுக்கு மிகவும் அத்தியாவசியமானதும்கூட! அதுதான் ரசம். இந்த ரசத்தை வெரைட்டியாக வைப்பதில்தான் சமையல் நுட்பம் இருக்கிறது.
அந்த வகையில் மாங்காய் ரசம் செய்து பார்த்திருக்கிறீர்களா? அந்தப் புளிப்பு உங்களுக்கு புது அனுபவம் தரும். பார்க்கலாம், சுவையான மாங்காய் ரசம் எளிமையான முறையில் எப்படி செய்வது என்று?
மாங்காய் ரசம் செய்யத் தேவையான பொருட்கள் : மாங்காய் – 1, தண்ணீர் – 1/2 கப், துவரம் பருப்பு – 1/4 கப், கடுகு – 1/2 டீ ஸ்பூன், சீரகம் – 1 டீ ஸ்பூன், கருவேப்பிலை – தேவைக்கு ஏற்ப, பச்சை மிளகாய் – 1, பெருங்காயம் – 1 சிட்டிகை, இஞ்சி – குறைவாக, பூண்டு – 3 பற்கள், தக்காளி – 1, சீரகப் பொடி – 1 டீ ஸ்பூன், எலுமிச்சை சாறு – 1 டீ ஸ்பூன், மிளகுப் பொடி – 1/2 டீ ஸ்பூன், மஞ்சள் 1 டீ ஸ்பூன், தனியா பொடி – 1 1/2 டீ ஸ்பூன், வெல்லம் – 1 டீ ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி இலை – தேவையான அளவு
மாங்காய் ரசம் செய்முறை :
மாங்காயை முழுதாக அப்படியே கழுவி குக்கரில் வைத்து 1/2 கப் தண்ணீர் வைத்து வேக விடுங்கள். 5 விசில் வந்ததும் இறக்கவும். பின் தோலை நீக்கி மாங்காயின் சதையை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக துவரம் பருப்பையும் வேக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் தனியாக வைத்துவிட்டு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் பொறிய விடுங்கள். பெருங்காயப்பொடி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி என போட்டு தாளிக்கவும். பூண்டை இடித்து போடவும்.
இவை வதங்கியதும் மாங்காய் சதை மற்றும் தக்காளியை கையிலேயே கரைத்து போடவும். அடுத்து எலுமிச்சைசாறு, மிளகுப்பொடி, மஞ்சள், சீரகப் பொடி, வெல்லம் ( தேவைப்பட்டால் ) வேக வைத்த துவரம்பருப்பு, உப்பு என சேர்த்து நன்கு கலந்து விடவும்.
தேவைக்கு ஏற்ப 2 கப் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு கொத்தமல்லி தழைகளை நறுக்கி போடவும். இப்போது சுவையான மாங்காய் ரசம் தயார்.