Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி ஆணையர் விர் பிரதாப் சிங் அதிரடி மாற்றம்.திருச்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு காரணமா?

0

'- Advertisement -

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக 3 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் சாய்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” நிதித்துறையில் அரசின் இணைச் செயலாளராக பணியாற்றி வந்த ராஜா கோபால் சுங்கரா, சுற்றுலாத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

Ad banner

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த டி. மோகன் ஐஏஎஸ், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த ஆன் மேரி ஸ்வர்ணா ஐஏஎஸ், விருப்ப ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சுற்றுலாத்துறை இயக்குநராகவும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராகவும் இருந்த டாக்டர் வி.பி. ஜெயசீலன், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் பதவிக்கும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதார இணை ஆணையராக பணியாற்றி வந்த ஷ்ரேயா பி. சிங் ஐஏஎஸ், பள்ளிக்கல்வித்துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதார இணை ஆணையர் பதவிக்கு, கோவை வணிகவரித்துறையின் மாநில வரி இணை ஆணையராக இருந்த தாகரே சுபம் ஞானதேவராவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ஷரண்யா அரி ஐஏஎஸ், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பொன்னேரி கோட்டாட்சியராக இருந்த எஃப்.அப்துல் ரஸீக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், செங்கல்பட்டு கோட்டாட்சியராக பணியாற்றி வந்த நல்லசிவன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி. ரவிக்குமார், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அரசின் இணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், உதகமண்டலத்தில் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த கே. சங்கீதா, கோவை வணிகவரித்துறையின் மாநில வரி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அந்தப் பதவியில் இருந்த தாகரே சுபம் ஞானதேவராவ் ஐஏஎஸ்க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த வீர் பிரதாப் சிங் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலும், திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த என். பொன்மணி, திருச்சி மாநகராட்சியின் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். (திருச்சி மாநகராட்சி ஆணையர் மீது கடந்த மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு புகார்களை கூறினர்.மேயிரிடம் கூறாமல் கூட பல்வேறு புகார்களை கூறினர். திமுக கவுன்சிலர் முத்து செல்வம் மாநகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவுத் திட்டத்தை நிறுத்தியது ஏன் எனக் கேட்டார்.அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் கூடஆணையரை சந்திக்க முடியவில்லை நானே மூன்று முறை வந்தேன் ஆனால் ஆணையர் பிஸியாக உள்ளார் எனக்கூறி அனுப்பி விட்டார்கள் .இவ்வாறு அனைத்து கட்சி கவுன்சிலர்களும் ஆணையர் மீது பல்வேறு புகார் விலை தெரிவித்தனர்.இதுதான் ஆணையரின் அதிரடி மாற்றத்திற்கு காரணமா என்பது குறித்த தகவல் இல்லை)

 

இதேபோல் பல்வேறு துறைகளில் செயலாளர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா, வருவாய் நிர்வாக துறை ஆணையராக சந்திரமோகன், உணவுப் பொருள் வளங்கள் நுகர்வோர் துறையின் ஆணையராக அஜய் யாதவ், பால் உற்பத்தி மற்றும் பால்வளத் துறையின் இயக்குனராக சிவராசு, சிறு தொழில் வளர்ச்சி கழகத் தலைவராக முருகானந்தம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.