திருச்சியில் நடைபெறும் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் 2வது பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க மாநிலத் தலைவர் கமலக்கண்ணன் அழைப்பு

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் 2வது பொதுக்குழு, செயற்குழு கூட்டம் திருச்சியில் நாளை புதன்கிழமை (2ந் தேதி) மேலப்புதூரில் உள்ள கே.எம்.எஸ். ஹக்கீம் பிரியாணி குடோன் ஹாலில் நடைபெற உள்ளது.
இச்சங்கத்தின் மாநில தலைவர் எம்.கே. கமலக் கண்ணன் தலைமை தாங்கி அழைப்பு விடுத்துள்ளார். மாநில ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் மலேசியா ஆர்.மணி, மாநில செயலாளர் இன்ஜினியர் வி.வீரமணி ஆகியோர் வரவேற்புரை ஆற்றுகின்றனர். மாநில கூடுதல் செயலாளர் டி.பக்கிரிசாமி, மாநில அவைத் தலைவர் எஸ்.அமிருதீன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டத்தில், மணல், செங்கல், டைல்ஸ், சிமெண்ட் உள்ளிட்ட அத்தியாவசிய மானகட்டுமானப் பொருட்களின் தொடர் விலை உயர்வைத் தடுத்து, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீடு கட்டும் கனவை நவாக்க அரசு உடனடியாக உரியக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது.
அரசு புறம்போக்கு நிலங்களை முழுமையாகக் கண்டறிந்து, சாதாரண மற்றும் நடுத்தர குடிமக்கள் சொந்த வீடு கட்டும் கனவை நினைவாக்கும் வகையில், அரசு தரப்பிலேயே முறையான வீட்டு மனைப் பிரிவுகளை ஏற்படுத்தி அவற்றை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது.
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், முகவர்கள் மற்றும் பொறியாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்களைக் காக்க தமிழக அரசின் தனிநல வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைப்பது. ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுவரும் உழைப்பாளர்களையும் ‘ப்ரோக்கர்’ என்று அழைப்பதைத் தவிர்த்து, உரிய கவுரவத்துடன் ‘நில முகவர்’ என்று அழைக்க அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடக் கோருவது.
ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரையிலான சொத்து பரிவர்த்தனைகளுக்கு கமிஷன் தொகையை சீராக 3 சத வீதமாக முறைப்படுத்த அரசு வலியுறுத்துவது. கட்டுமானம் துறையில் ஈடுபடும் பில்டர்கள், புரோ மோட்டர்கள், இன்ஜினியர்கள் மற்றும் மேஸ்திரிகளுக்கான அரசு சலுகைகள் அறிவிப்போடு நின்று விடாமல், அவற்றை உடனே முழுமையாக நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோருவதுடன், தொழில் சார்ந்த இடையூறுகளை சீர்படுத்துவது என அரசிடம் கோரிக்கை வைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுக்குழு தீர்மானமாக நிறைவேற்ற படவுள்ளது.
ஆகவே முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் ஈடுபட்டு வரும் அனைத்து நில வணிகர்கள், நில முகவர்கள் மற்றும் பொறியாளர்கள், ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்த தமிழகம் முழுவதும் உள்ள அனைவரும் வருகை தந்து கூட்டத்தை சிறப்பிக்குமாறு தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் மாநிலத் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

