டியூசன் எடுப்பதாக கூறி 10ம் வகுப்பு பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய 3 பெண் குழந்தைகளின் தந்தையான ஆசிரியர்
புதுச்சேரியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர், தனது சமூக அறிவியல் ஆசிரியரான ஜார்ஜ் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் ..
படிப்பில் சுமாராக இருக்கும் மாணவிகளுக்கு இலவசமாக டியூஷன் எடுப்பதாகக் கூறி தனியிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்த அந்த ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவியை மட்டும் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே வரவழைத்து அத்துமீறியுள்ளார். ஆசிரியர் செய்த இந்தத் தவற்றை மாணவி எதிர்க்க முற்பட்டபோது, அகமதிப்பீட்டு (இன்டெர்னல் மார்க்) மதிப்பெண்களைக் குறைத்து பெயிலாக்கி விடுவதாகவும், போலி வீடியோ ஒன்றைக் காட்டி பள்ளியை விட்டே நீக்குமாறு செய்துவிடுவேன் எனவும் மிரட்டி அச்சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஆசிரியரின் இந்தத் தொடர் அத்துமீறல்களால் அந்தச் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாகியுள்ளார். பாலியல் வன்கொடுமை குறித்தோ, கர்ப்பம் குறித்தோ எவ்வித புரிதலும் இல்லாத அந்த மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதே இந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மருத்துவர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், குடும்பத்துடன் தலைமறைவாக முயன்ற அந்த ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
கல்லூரி மற்றும் பள்ளியில் படிக்கும் மூன்று பெண் குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கும் ஒருவரே, தன் மாணவிக்கு இந்தக் கொடூரத்தை இழைத்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

