கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் பால் நிறுத்தப் போராட்டம் . திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் நிறுவனம் முன்பாக பால் உற்பத்தியாளர்கள் நேற்று வியாழக்கிழமை மாலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவ 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், தற்போது 4.5% கொழுப்புச் சத்தும், 8.5% இதர சத்துக்களும் கொண்ட ஒரு லிட்டர் தரமான பாலுக்கு கொள்முதல் விலையாக 35 ரூபாயும், அரசின் ஊக்கத்தொகையாக 3 ரூபாயும் ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.
தமிழக வெற்றிக்கழக அரசு தற்போது பால் கொள்முதலுக்கான ஊக்கத்தொகையில் 2 ரூபாயும், கூட்டுறவு சங்கம் மூலமாக 1 ரூபாயும் உயர்த்தி வழங்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் இதே தரமுடைய ஒரு லிட்டர் பாலுக்கு கொள்முதல் விலையாக 56 ரூபாய் நிர்ணயம் செய்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு 58 ரூபாய் வரை வழங்கி வரும் நிலையில், ஆவின் நிறுவனத்தின் இந்த குறைந்த கொள்முதல் விலையால் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம் கூறுகின்றனர்.
ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக்கூடாது என தமிழக அரசு விரும்பினால், அதனால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய ஆவின் நிறுவனத்திற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
அரசு மானியம் வழங்கி, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாலை விற்பனை செய்ய வேண்டும்.இல்லையெனில், பால் விற்பனை விலையை உயர்த்தி, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையை வழங்க வேண்டும்.
தேர்தல் காலத்தில் கொள்முதல் விலையை உயர்த்தி பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம் என்ற வாக்குறுதியை தவெக தலைமையிலான தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பால் உற்பத்தியாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இதில், தமிழ்நாடு ஆவின் பி எம் சி பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு தொடக்கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், கூட்டுறவு பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் இணையம், தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் நலச்சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

