சென்னை வேளச்சேரியல் கணவருடன் நடந்து சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் குடிபோதையில் இருந்தாலே பெண்களிடம் இதுபோன்ற சேட்டைகளில் வழக்கமாக அவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.சென்னை வேளச்சேரி ஒரண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த தம்பதி ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று உள்ளனர்.
இரவு லேசாக மழை தூறல் இருந்ததால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து இருந்தது. அப்போது பின்னால் பைக்கில் 2 பேர் வந்தனர். அதில் பின்னால் அமர்ந்து இருந்த நபர், கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் பின்புறத்தில் தட்டியும், மார்பில் கைவைத்தும் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் அலறி யுள்ளார். அவரது கணவர் சத்தம் போட்டு உள்ளார். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தப்பி சென்றவர்களின் பைக் பதிவு எண்ணை வைத்து விசாரித்த போது, வேளச்சேரியை சேர்ந்த மணிமாறன் என்பவருக்கு சொந்தமான பைக் என தெரியவந்தது. உடனே, போலீசார் பைக் உரிமையாளர் வீட்டிற்கு சென்று விசாரித்த போது, மணிமாறன் குடிபோதையில் போலீசாரை ஆபாசமாக பேசியும், நான் யார் தெரியுமா, நான் இன்ஸ்பெக்டர் என்னிடமே விசாரணையா என கத்தியுள்ளார். வேளச்சேரி போலீசார் மேலும் மணிமாறனிடம் நடத்திய விசாரணையில் .அவர் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதும், இவர் சென்னையில் பணியாற்றிய காலத்தில், பெண் காவலர்களிடம் அநாகரிகமாக நடந்ததாக குற்றச்சாட்டு இருந்துள்ளது.
இதனால் உயர் அதிகாரிகள் மணிமாறனை ராணிப்பேட்டைக்கு இடமாற்றம் செய்தது தெரியவந்தது. தற்போது ராணிபேட்டையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இவரது குடும்பத்தினர் வேளச்சேரியில் வசித்து வருகின்றனர். மணிமாறன் மட்டும் ஒவ்வொரு வார இறுதியில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. இப்படி வார இறுதியில் வரும் போது, நண்பர்கள் மற்றும் மைத்துனருடன் மது அருந்துவிட்டு நள்ளிரவில் வீட்டிற்கு வரும் போது, மணிமாறன் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் இதுபோன்ற தவறான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தன்று தனது மைத்துனருடன் பைக்கில் செல்லும் போது இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது.
அதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிமாறனை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும், மணிமாறன் மீது பாலியல் வழக்குகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து வேளச்சேரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பாலியல் வழக்கில் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ராணிபேட்டை மாவட்ட எஸ்பி அதிரடியாக மணிமாறனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

