திருச்சி : ஒப்பந்த முறையைக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாட்டில் தீர்மானம்.

ஒப்பந்த முறையைக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாட்டில் தீர்மானம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு (REWA) சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாடு இன்று வெள்ளிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க திருச்சி – கரூர் மண்டல தலைவர் ஆர்.சிங்கராயர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநிலத் துணைத் தலைவர் எஸ். ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். மண்டல பொதுச் செயலாளர்கள் காரைக்குடி வி.பாஸ்கரன், நாகை எஸ். வைத்தியநாதன், புதுகை ஆர். மணிமாறன், திருச்சி – கரூர் ஜே. மாணிக்கம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் டி.சீனிவாசன்,
பொதுச் செயலாளர் எஸ். சிவானந்தம்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சம்மேளன துணைத் தலைவர்கள் வி.பிச்சை, எம்.கண்ணன், என்.ராமநாதன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநிலத் துணைத் தலைவர் ஆர்.நாகராஜ் ஆகியோர்
சிறப்புரையாற்றினர். மாநாட்டில் போக்குவரத்து கழகங்களின் வரவு-செலவு வித்தியாசத் தொகையை ஈடுகட்ட மாநில வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
போக்குவரத்து கழகங்களின் மொத்தக் கடனையும் அரசே ஏற்றுக்கொண்டு கடனில் இருந்து விடுவிக்க வேண்டும். மின்சார பேருந்துகளை கழகங்களே இயக்க வேண்டும். தனியாருக்கு கொடுக்கக் கூடாது.பேருந்து பராமரிப்பை மேம்படுத்த அனைத்து மண்டலங்களிலும் தொழில்நுட்ப பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த முறையைக் கைவிட்டு, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
ஒப்பந்த நிலுவைத் தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்கிட வேண்டும்.
1.4.2003-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியத்தை உறுதி செய்ய வேண்டும். அதுவரை ஓய்வுபெற்றவர்களுக்கு இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஜூன் மாதம் வரையிலான ஓய்வூதியக்கால பலன்கள் மற்றும் அனைத்து ஓய்வூதிய பலன்களையும் உடனுக்குடன் வழங்க வேண்டும்.
ஓய்வூதியத்தில் ஒப்பந்தப்படியான உயர்வு, அகவிலைப்படி நிலுவை, மருத்துவக் காப்பீடு மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதிய உயர்வு ஆகிய கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
பதிவு செய்துள்ள அனைவருக்கும் வாரிசு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கும்பகோணம் மண்டல பொதுச்செயலாளர் ஜி.மணிமாறன் வரவேற்றார். நிறைவாக திருச்சி – கரூர் மண்டல துணைத் தலைவர் பி.முத்துக்கருப்பன் நன்றி கூறினார். இம்மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.

