/
தோட்டக்கலைத் துறை என்பது காய்கறிகள், பழங்கள், மலர்கள், நறுமணப் பயிர்கள், அலங்காரத் தாவரங்கள் மற்றும் மூலிகைப் பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பயிர்களை உள்ளடக்கிய உயர் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் சார்ந்த துறையாகும்.
இத்துறைப் பயிர்கள் அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டவை. குறைந்த பரப்பளவில் அதிக வருமானத்தைத் தரக்கூடியவை மற்றும் சமவெளி முதல் மலைப்பகுதிகள் வரை பயிர் பன்முகத்தன்மைக்கு ஆதாரமாக உள்ளன. மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வருமான உயர்வில் இத்துறையின் பங்கு மிக முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் அனைத்து தட்பவெப்ப காலநிலைகளிலும் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுவது தனிச்சிறப்பாகும்.
முன்னால் முதலமைச்சர் டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், 26.09.1979 அன்று தோட்டக்கலைத் துறை ஒரு தனித் துறையாக அங்கீகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு முனைவர். A.M.சுவாமிநாதன். இ.ஆ.ப. கமிட்டி வல்லுநர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், தோட்டக்கலை வளர்ச்சியே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்” என்ற உன்னத நோக்கத்தோடு, தோட்டக்கலைத் துறை மறுசீரமைக்கப்பட்டது. இந்த மறுசீரமைப்பே தமிழ்நாட்டை நாட்டின் முன்னணி தோட்டக்கலை மாநிலமாக உருவாக்க முக்கிய பங்காற்றியுள்ளது.
மேற்கண்ட முயற்ச்சிகளின் பலனால், 1979 ஆம் ஆண்டு 6.6 லட்சம் ஹெக்டேராக இருந்த தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பானது தற்போது 2025-ல் 16.29 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. தேசிய அளவில், தோட்டக்கலைப் பயிர்கள் மொத்த சாகுபடி பரப்பளவில் சுமார் 13.1% மட்டுமே இருந்தாலும், அவை வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 30.4% பங்களிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் வேளாண்மை மொத்த மதிப்பு கூடுதல் (GVA)-ல் தோட்டக்கலைத் துறை சுமார் 33% பங்களிப்பை வழங்குகிறது. 2024-25 ஆம் நிதி ஆண்டில், மொத்த வேளாண் ஏற்றுமதியில் (தரவு ஆதாரம்: APEDA) தோட்டக்கலைத் பயிர்கள் மூலம் மட்டும் 45% (ரூ.5822.11 கோடிகள்) தமிழகத்திற்கு வருவாயை ஈட்டி தந்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தோட்டக்கலைத் துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.
பழைய உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் மூலம் வாரத்தில் நான்கு நாள்கள் AAOs/AHOS களப்பணியில் ஈடுபட்டு விவசாயிகளை நேரில் சந்தித்து திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திவந்தோம். தற்போது வேளாண்மை – உழவர் நலத்துறை அரசாணை எண் 230, 252 & 288-ன் படி, “உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 20” (UATT 20) – ஐ செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 4,311 விரிவாக்க அலுவலர்களை ஒன்றிணைத்து, ஒவ்வொரு கள அலுவலருக்கும் 3-4 கிராமங்கள் அல்லது 1183 ஹெக்டேர் பயிர் சாகுபடி பரப்பு ஒதுக்கப்பட வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் 20% களப்பணியாளர்களுக்கு மட்டுமே 3 முதல் 4 கிராமங்களும், மீதமுள்ள 80 சதவீத களப்பணியாளர்களுக்கு 8 முதல் 22 கிராமங்கள் வரை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், 60 சதவீத களப்பணியாளர்கள் 2000 4 5000 ஹெக்டேர் வரை பணியாற்றுவதற்கு பயிர் சாகுபடி பரப்பு ஒதுக்கீடு செய்து அதிக பணிச் சுமையை வழங்கி உள்ளார்கள்.
எந்தவொரு புதிய திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு முன், வல்லுநர்களின் குழுவின் பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் துறை அலுவலர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று மட்டுமே திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால், UATT 20 திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் போது இத்தகைய ஆலோசனை மற்றும் கலந்தாலோசனை நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. 2023 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட இத்திட்டம் பல்வேறு எதிர்ப்புகளால் செயல்படுத்தப்படாமல் இருந்த நிலையில், 2025 நவம்பரில் அவசரமாக அரசாணை வெளியிடப்பட்டு, 19.06.2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. எவ்வித வல்லுநர் குழு பரிந்துரை அல்லது அறிவியல் அடிப்படையிலான ஆய்வு அறிக்கை இன்றி செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தால், களப்பணியாளர்களும் விவசாயிகளும் பல்வேறு நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் சேவை வழங்கல் தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஒரே கள அலுவலரிடம் பல்வேறு துறைகளின் பொறுப்புகளை ஒப்படைப்பதால், ஒவ்வொரு பயிருக்கும் தேவையான தொழில்நுட்பக் ஆலோசனைகள் உரிய நேரத்தில் வழங்க இயலாத நிலை உருவாகும். இதனால் விவசாயிகளின் உற்பத்தி, வருமானம் மற்றும் அரசுத் திட்டப் பயன்கள் பாதிக்கப்படுவதுடன், இலட்சக்கணக்கான தோட்டக்கலை விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும். பல தசாப்தங்களாக அறிவியல் அடிப்படையில் தனித்துறையாக வளர்ந்து வந்த தோட்டக்கலைத் துறையின் தனித்துவத்தையும் UATT 2.0 திட்டம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறையின் கீழ் உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 20-ஐச் செயல்படுத்துவதற்கு எதிராக, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் நவம்பர் 2025 முதல் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் UATT 20.வை இரத்து செய்யுமாறு பல்வேறு
ஊடகங்களிலும் மற்றும் சமூக வலைத்தளைகளிலும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகள் கருத்துக் கேட்புக் கூட்டங்களிலும், பல விவசாயிகள் அமைச்சரிடம் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பல்வேறு கட்சி தலைவர்களான பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர். அன்புமணி இராமதாஸ் அவர்கள், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மற்றும் We the Leaders இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை அவர்கள் என பலர் உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 20 (UATT 20)-க்கு எதிர்ப்பு தெரிவித்து, இரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பு. ஊட்டச்சத்து பாதுகாப்பு, விவசாயிகளின் வருமான உயர்வு மற்றும் வேளாண் ஏற்றுமதி வளர்ச்சியில் தோட்டக்கலைத் துறையின் முக்கியப் பங்கைக் கருத்தில் கொண்டு, தோட்டக்கலைத் துறையின் தனித்துவம், தொழில்நுட்பக் அடையாளம் மற்றும் நிர்வாக அமைப்பைப் பாதுகாக்கும் வகையில், ‘உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 20 (UATT 20) தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அனைத்து அரசாணைகளையும் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும், இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த பழைய உழவர் அலுவலர் தொடர்புத் திட்டத்தை’ மீண்டும் அமல்படுத்தி, விவசாயிகளுக்கு தடையற்ற தொழில்நுட்பச் சேவைகள் அந்தந்த துறைகளின் மூலம் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பணிவுடன் கேட்டுக்கொள்கிறது.

