திருச்சி அருகே கவிவசாயியை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது.

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா இசனைக்கோரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமஜயம் (வயது 27). இவர் கடந்த தனது விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அஜய் (வயது25), அஜித் (வயது25), சரண்ராஜ் (வயது 26) மற்றும் அவர்களது நண்பர் ஒருவர் மது போதையில் அங்கு நின்று கொண்டிருந்தனர்.
அவர்களது செயல் குறித்து ராமஜயம் தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் ராமஜயத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, கைகளாலும், அரிவாளாலும் சரமாரியாக தாக்கினர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இந்த தாக்குதலில் தலை, இடது தோள்பட்டை, மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த காயமடைந்த ராமஜயம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சமயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2.
திருச்சி அருகே
கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
திருச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவெறும்பூர், ராம்ஜி நகர் மற்றும் காட்டுப்புத்தூர் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் லாட்டரி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று புதிய காட்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ரேசன் கடை அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர். சோதனையில் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் ராம்ஜி நகர் மில் காலனியைச் சேர்ந்த பேபி (வயது 60) என்பது தெரிந்தது. அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோல், ராம்ஜி நகர் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் பெட்ரோல் பங்க் பகுதியில் ரோந்து சென்றபோது, கஞ்சா விற்ற அதே மில் காலனியைச் சேர்ந்த முலுமதி (வயது 65) என்ற பெண்ணை கைது செய்தனர். அவரிடமிருந்து 90 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போன்று
முசிறி உட்கோட்டம் காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் எலூர்ப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை எண்களாக எழுதி விற்பனை செய்த எலந்தமடைப்புதூரைச் சேர்ந்த ஜெகதீசன் (வயது 52) என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து லாட்டரி எண்கள் எழுதப்பட்ட சீட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.300 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 3 பேர் மீதும் அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கஞ்சா மற்றும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

