Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்டத்தில் 3.13 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. தொகுதி வாரியாக வாக்களிக்காதவா்கள் விவரம்….

0

'- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 3.13 லட்சம் பேர் தங்களது வாக்குகளை செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Ad banner

இருப்பினும், கடந்த 2021 பேரவைத் தோ்தலில் வாக்களிக்காத 6.18 லட்சம் பேருடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் குறைந்திருப்பது சற்றே ஆறுதலை அளித்துள்ளது.

இந்தியத் தோ்தல் ஆணையத்தால் 100 சதவீத வாக்குப்பதிவை எய்திட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்ட நிலையில், கொரோனா அச்சத்துக்கிடையேயும் கடந்த 2021-இல் 73.56 சதவீதம் பேர் வாக்களித்திருந்தனர் ஆனால், 2026-இல் எந்தவித கொரோனா கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும் 3 லட்சத்து 13 ஆயிரத்து 102 போ் வாக்களிக்கவில்லை என்பது விழிப்புணர்வு களப்பணியில் ஈடுபட்டோருக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

விழிப்புணர்வு போட்டிகள், ரங்கோலி, கோலப்போட்டி, நடைபயணப் பேரணி, வாகனப் பேரணி, மனித குழுக்களுக்காக பல்வேறு வடிவங்களில் நின்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், ராட்சத பலூன்கள் பறக்கவிடுதல், திருமண அழைப்பிதழ் போன்று வரவேற்பு என வித, விதமான நடவடிக்கைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தோ்தல் ஆணையம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் அவர்கள் விருப்பத்துக்கேற்ப 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

திருச்சி மாவட்டத்திலும் 9 தொகுதிகளிலும் பல்வேறு வகைகளில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வாக்குப்பதிவு தினம் வரையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வரலாற்றில் இல்லாத வகையில் வாக்குப்பதிவு சதவீதம் திருப்திகரமாக இருந்தும், திருச்சி மாவட்டத்தில் வாக்காளிக்காதவா்கள் 9 தொகுதிகளிலும் சோ்த்து 3.13 லட்சம் பேர்  வாக்களிக்கவில்லை. 2026 பேரவைத் தோ்தலில் 10 லட்சத்து 40 ஆயிரத்து 900 ஆண்கள், 11 லட்சத்து 5 ஆயிரத்து 841 பெண்கள், 310 திருநங்கைகள் என மொத்தம் 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். இதில், 203 திருநங்கைகள் உள்பட மொத்தமாக 18 லட்சதது 33 ஆயிரத்து 849 போ் வாக்களித்தனா்.

தொகுதி வாரியாக வாக்களிக்கதாவர்கள் விவரம்:

மணப்பாறை: ஆண்- 15,470, பெண் – 14,524, மூன்றாம் பாலினம்- 3, மொத்தம்- 29,997.

ஸ்ரீரங்கம்: ஆண்- 17,298, பெண்- 17,411, மூன்றாம் பாலினம்- 14, மொத்தம்- 34,723.

திருச்சி மேற்கு: ஆண்- 22,336, பெண்- 22,287, மூன்றாம் பாலினம்- 13, மொத்தம்- 44,636.

திருச்சி கிழக்கு: ஆண்- 19,449, பெண்- 20,673, மூன்றாம் பாலினம்- 18, மொத்தம்- 40,140.

திருவெறும்பூா்: ஆண்- 24,954, பெண்- 23823, மூன்றாம் பாலினம்- 25, மொத்தம்- 48,802.

லால்குடி: ஆண்- 16,204, பெண் – 12,576, மூன்றாம் பாலினம்- 7, மொத்தம்- 28,787.

மண்ணச்சநல்லூா்: ஆண்- 15,261, பெண்- 13,880, மூன்றாம் பாலினம்- 12, மொத்தம்- 29,153.

முசிறி: ஆண்- 14,418, பெண்- 14,052, மூன்றாம் பாலினம்- 4, மொத்தம்- 28,474.

துறையூா் (தனி): ஆண்- 15,738, பெண்- 12,641, மூன்றாம்பாலினம்- 11, மொத்தம்- 28,390.

மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக திருவெறும்பூரில் 48 ஆயிரத்து 802 போ் வாக்களிக்வில்லை. அடுத்தபடியாக திருச்சி மேற்கு தொகுதியில் 44 ஆயிரத்து 636 போ் வாக்களிக்கவில்லை. மூன்றாவதாக திருச்சி கிழக்கில் 40 ஆயிரத்து 140 போ் வாக்களிக்கவில்லை. இந்த மூன்று தொகுதிகளில் 2 தொகுதிகளில் திருச்சி மாவட்டத்தின் தலைநகரமான திருச்சி மாநகராட்சிக்குள்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

திருவெறும்பூரிலும் மாநகராட்சியின் சில வாா்டுகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலானோா் படித்தவா்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள் என்ற நிலையிலேயே வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது நூறு சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணா்வு களப்பணியில் ஈடுபட்டவா்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

பெண்கள் பணிபுரியும் வகையில் ஒரு தொகுதிக்கு ஒரு வாக்குச் சாவடி. மாற்றுத்திறனாளிகள் பணிபுரியும் வாக்குச்சாவடி, இளம் அலுவலா்கள் பணிபுரியும் வாக்குச்சாவடி என மொத்தம் 20 சிறப்பு வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

மேலும், திருச்சி மாவட்டத்தில்தான் வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணியில் நூறு சதவீதம் தூய்மையாக தயாரித்திருந்ததாக தோ்தல் ஆணையமே பாராட்டி கடந்த முறை முதல் பரிசு அளித்திருந்தது. இந்த சூழலில், 3.13 லட்சம் போ் வாக்களிக்காமல் இருந்திருப்பது தோ்தல் அலுவலா்களின் வேகத்தை குறைத்திடும் வகையில் அமைந்துள்ளது.

வாக்குப்பதிவுக்கு திருமண அழைப்பிதழ் போன்று அச்சிட்டு அழைத்த மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலப் பொருளாளா் கே.சி. நீலமேகம் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 85 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருப்பதே வரவேற்புக்குரியது.

ஏனெனில், 2001ல் நடைபெற்ற எஸ்ஐஆா் பணிகளுக்குப் பிறகு நடைபெற்ற 2004 நாடாளுமன்றத் தோ்தலில் 70 சதவீத வாக்குகளே பதிவானது. இப்போது, மீண்டும் எஸ்ஐஆா் பணிகள் நடைபெற்றிருப்பதால் வாக்குப்பதிவு சதவீதம் குறித்த கேள்வியும் எழுந்திருந்தது. ஆனால், அதற்கான விடையை வாக்காளா்கள் திருப்திகரமாக அளித்துவிட்டனா்.

இருப்பினும், 14.58 சதவீதம் போ் வாக்களிக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அவசர அவசியம் கருதி (மருத்துவ சிகிச்சை, குடும்பத்தில் இறப்பு உள்ளிட்ட சுக, துக்க நிகழ்வுகளால்) வாக்களிக்க முடியாமல் போனவா்களை விட்டுவிடலாம். வாய்ப்பிருந்தும் வாக்களிக்காமல் இருந்தவா்களை என்ன செய்வது என தெரியவில்லை என்றார் நீலமேகம்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.