Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உல்லாசத்திற்கு மறுத்த கள்ளக்காதலி மற்றும் மகனை வெட்டி கொன்ற கொடூர கள்ளக்காதலன்

0

'- Advertisement -

சேலம் அருகே உல்லாசத்திற்கு மறுத்த தகராறில் கள்ளக்காதலி, அவரது 10 வயது மகனை வெட்டிக்கொலை செய்த வாலிபர் தப்பியோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ad banner

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி கருத்தானூர் பகுதியை சேர்ந்தவர் சிவன். இவரது மகள் சத்யா (வயது 33), சத்யாவின் கணவர் ராஜ்குமார். இவர்களது மகள் மகிஷா (13), மகன் கிஷாந்த் (10). கருத்தானூர் அருகே உள்ள அரசு பள்ளியில் இருவரும் முறையே 7ம் வகுப்பும், 5ம் வகுப்பும் படித்து வந்தனர். சத்யா கணவருடன் சேர்ந்து, கருத்தானூரில் உள்ள தனது தந்தையின் நிலத்தில் வெல்லம் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக, ராஜ்குமார் கடந்த 2 வருடங்களுக்கு முன் சத்யாவை பிரிந்து, வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், சத்யா தனது மகன் மற்றும் மகளுடன், தந்தையின் வீட்டின் அருகில் தனியாக வசித்து வந்தார்.

 

இந்நிலையில், ஓமலூரில் உள்ள பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை ஷோரூமில், சத்யா வேலை செய்து வந்தார். அதே ஷோரூமில், சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன் நகரைச் சேர்ந்த சக்திவேல் (வயது 30) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். அவருக்கும், சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சக்திவேல் அடிக்கடி சத்யாவின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, சத்யா வீட்டில் இருந்து உடலில் பலத்த வெட்டு காயங்களுடன், வலது கை மணிக்கட்டு துண்டான நிலையில் கதறியபடி அருகில் வசிக்கும் தந்தையின் வீட்டை நோக்கி ஓடி வந்துள்ளார். மகளின் சத்தம் கேட்டு, அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பதறியபடி வெளியே வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் நின்றிருந்த சத்யாவை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு சிறுவன் கிஷாந்த் தலை மற்றும் கழுத்தில் வெட்டு காயங்களுடன் துடித்து கொண்டிருந்தான்.

 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் கிஷாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சத்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது. சத்யாவின் கள்ளக்காதலன் சக்திவேலுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அவரது கள்ளத்தொடர்பு விவகாரத்தால் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால், சேலத்தில் இருந்து ஓமலூருக்கு வந்து வெள்ளாளப்பட்டியில் தாயுடன் வசித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு சக்திவேல் சத்யாவின் வீட்டிற்கு வந்து உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

 

அப்போது, சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் கிஷாந்த் எழுந்து, சக்திவேலை வெளியே செல்லுமாறு கூறினான். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், அரிவாளை எடுத்து கிஷாந்தை வெட்டிக்கொலை செய்தார். தடுக்க முயன்ற சத்யாவையும் வெட்டியது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சக்திவேலை தேடி வந்தனர். இதற்கிடையே, கருப்பூர் கோரிமேடு பகுதியில், சக்திவேல் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கருப்பூர் போலீசார் அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சத்யா, நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மகனை காப்பாற்றும் முயற்சியில் துண்டான கை

போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தபோது, அங்கு சத்யாவின் கை மணிக்கட்டு துண்டான நிலையில் கிடந்தது. போலீசார் அதை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலன் சக்திவேல், மகனை வெட்டுவதை தடுக்கும் முயற்சியில், சத்யாவின் கை துண்டாகி உள்ளது. மேலும், அவரது தலையிலும் பலத்த வெட்டு விழுந்ததால், அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், சத்யாவின் மகள் மகிஷா, சின்னப்பம்பட்டியில் உள்ள மாமா வீட்டிற்கு சென்றிருந்தாள். இதனால் சத்யாவும், மகனும் மட்டுமே வீட்டில் இருந்தனர். மகிஷா வீட்டில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.