Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆட்சிக்கு வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் தனது சொந்த செலவில் ஜல்லிக்கட்டு, கபடி போட்டிகள் நடத்தப்படும், நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்களின் தொகை வட்டியுடன் திரும்ப பெற்று தரப்படும் உள்ளிட்ட 18 வாக்குறுதிகளை அளித்துள்ள அதிமுக வேட்பாளர் குமார்.தொகுதி முழுவதும் கொண்டு சேர்க்கும் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் கார்த்தி

0

'- Advertisement -

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அதிமுக வேட்பாளர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் அதிமுக அரசு அமைந்த உடன் நிறைவேற்ற போகும் வாக்குறுதிகளை நோட்டீஸ் ஆக அச்சடித்து  திருவெறும்பூர் தொகுதி முழுவதும் விநியோகித்து வருகிறார்.அதில் அவர் வெளியிட்டுள்ள வாக்குறுதிகள் முழு விவரம் ….

 

Ad banner

அன்பார்ந்த திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் .

 

கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் நான் அ.இ.அ.தி.மு.கழக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும், தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்களின் நலனுக்காகவும், தொகுதி வளர்ச்சிக்காகவும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியின் பிரதிநிதியாக செயல்பட்டு கொண்டிருக்கிறேன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால்…

 

1. திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே ஒரு சுங்கச்சாவடி இயங்கிக்கொண்டிருக்கிற வேளையில் புதிதாக அமைக்கப்பட்ட அரைவட்ட சுற்றுசாலையில் விதிகளுக்கு புறம்பாக, மேலும் ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இதை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும். எதிர்க்கவும் இல்லை, அதை தடுக்கவும் இல்லை. அதை தடுத்து நிறுத்த வேண்டுமென நான் சம்மந்தப்பட்ட மத்திய அரசு அமைச்சருக்கும், மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் சட்டவிதிகளை சுட்டிக்காட்டியும், கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் தடுத்து நிறுத்தினேன்.

 

மேலும், தேர்தல் சமயத்தில் தி.மு.க.வும். தி.மு.க.வின் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து மக்களை திரட்டி பல்வேறு காலக்கட்டங்களில் அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன.

 

மேலும், கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் கீழ்கண்ட வாக்குறுதிகளை வழங்கி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் இதுநாள் வரை கவனம் செலுத்தாத காரணத்தால் தொகுதி வளர்ச்சி அடையாமலும், தொகுதி மக்கள் உட்பட திருவெறும்பூர் தொகுதியை கடக்கின்ற பொதுமக்கள் இன்னலுக்கு உள்ளாகின்றனர்.

 

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கழக அரசு அமைந்ததும்,

 

1. பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் பாதிக்காத வகையில் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்ட அதிவிரைவு பறக்கும் சாலை அமைத்து கொடுக்கப்படும்.

 

(Express Elevated way) இதன் மூலம் சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லா சாலையாக மாற்றப்படும்.

 

2. அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் மூலமாக 7கிமீ சுற்றுவட்டாரத்தில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு குப்பையில் இருந்து வருகின்ற துர்நாற்றம், நிலத்தடி நீர் மாசுபடுதல் மற்றும் சுகாதார சீர்கேட்டால் அவர்களுடைய உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே கழக ஆட்சி அமைந்ததும் போர்க்கால அடிப்படையில் குப்பைகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு அந்த இடத்தில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய வணிக வளாகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

3. தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வாளவந்தான் கோட்டை வழியாக சென்னை நெடுஞ்சாலை வரை அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

4. திருவெறும்பூரில் இருந்து லால்குடி செல்ல வேண்டுமென்றால் 36 கிமீ சுற்றி செல்லும் நிலை உள்ளதை மாற்றி காவிரியில் வேங்கூர் படித்துறையிலிருந்து உத்தமர்சீலி வரை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் கிளிக்கூடு முதல் இடையாற்றுமங்கலம் வரை குறுக்கே பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

5. தொகுதி முழுவதும் நிரந்தர பட்டா பெறாமல் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை நிவர்த்தி செய்கின்ற வகையில் ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் ஒரு சிறப்பு அலுவலர் குழு அமைத்து, தீர்வு காணப்படும்.

 

6. திருவெறும்பூர் தொகுதியின் மையப்பகுதியில், ஓடிக்கொண்டிருக்கின்ற உய்யகொண்டான் கால்வாய், தூர்வாரப்பட்டு இருபுறம் கரைகள் உயர்த்தப்படும்.7. குண்டூர் குளம், பொன்மலைப்பட்டி மாவடி குளம், கூத்தைப்பார் பெரிய ஏரி, சிவந்தான் குளம், பத்தாளப்பேட்டை குளம், கீழமுருக்கூர் குளம், வேங்கூர் சாம்பன் குளம், வேங்கூர் நொச்சிக்குளம் தியேட்டர் குளம்,நடராஜபுரம் 2 கிராம குளங்கள். அரசங்குடி மாரியம்மன் கோவில் குளம், சமுத்திக்குளம் கிளியூர் பெரியகுளம், வெள்ளாங்குளம், புதேச்சரி குளம், திருநெடுங்குளம் பெரியகுளம், செம்மங்குளம் ஏரி மற்றும் தொகுதியில் இருக்கின்ற அனைத்து நீர்நிலைகளும் நிலத்தடி நீர் உயரும் பொருட்டு தூர்வாரப்பட்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும்.

 

8. தஞ்சை மெயின் ரோட்டிலிருந்து கல்கண்டார்கோட்டை செல்கின்ற நெடுஞ்சாலையில் மாஜி ராணுவ காலனியில் ரயில்வே மேம்பாலம் மற்றும் குமரேசபுரத்தில் உள்ள ரயில்வே Level Crossing-b கீழ்மட்ட பாலம் அமைக்கப்படும்.

 

9. சிறு, குறு தொழில்கள் மேம்படுகின்ற வகையில் அவர்களுக்கு திமுக ஆட்சியில் உள்ள மின்நுகர்வு மற்றும் மற்ற சிரமங்கள் கண்டறியப்பட்டு நிவர்த்தி செய்து அவர்கள் தொழில் முனைவதற்கு ஊக்கப்படுத்தப்படும்.

 

10. BHEL வழங்கப்பட்ட 5500 கோடி ரூபாய் மதிப்புள்ள உப்பூர் Power Project திட்டம் உடனடியாக துவக்கப்படும்.

 

11. BHEL ECB வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 1.45 கோடி பணத்தை விசாரணையை துரிதப்படுத்தி மீட்டு தருவேன் என வாக்குறுதியளிக்கிறேன்.

 

12. திருச்சியில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளில் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசு நிறுவனம் சிறுதொழில் முதலீட்டாளர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளை கொண்ட குழு அமைக்கப்படும்.

 

13. கொட்டப்பட்டியில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான 38 ஏக்கர் நிலம் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த வணிக வளாகம், சந்தை அமைக்கப்படும்.

 

14. நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்களின் தொகை வட்டியுடன் திரும்ப .பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

 

15. தேர்தல் வாக்குறுதியில் பாரம்பரிய முறைப்படி அனைத்து ஊர்களிலும் நடக்கும் ஜல்லிக்கட்டை எனது செலவில் நடத்திக்கொடுப்பேன் என பொய் வாக்குறுதி கொடுத்து விட்டு சூரியூர் மற்றும் காட்டூரில் மட்டுமே ஜல்லிக்கட்டை நடத்திய ஆஸ்கர் நாயகன் போல் இல்லாமல் அனைத்து கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுப்பேன். சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் கொண்ட “ஜல்லிக்கட்டு குழு” அமைக்கப்படும். மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உள்கட்டமைப்புக்கு தேவையான (தடுப்பு வேலி ( Barry Guard ), வாடிவாசல், மேடை பார்வையாளர்கள் மாடம், பத்திரிக்கையாளர் மாடம் புறவாடிவாசல், காளைகள் சேகரிக்கும் இடம்) அனைத்து பொருட்களும் எனது சொந்த செலவில் வாங்கப்பட்டு ஜல்லிக்கட்டு குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

 

16. தொகுதியில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டங்கள் அரைகுறையாக நிற்கின்றன. அவை கழக ஆட்சி அமைந்ததும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

17. குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பறை வசதி, தெரு விளக்கு வசதி, போன்ற அடிப்படை தேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து அப்பகுதி மக்களின் பொதுசபையை கூட்டி ஆலோசித்து தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்யும் அரசாக கழக அரசு செயல்படும்.

 

18. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில், கபாடி போட்டியை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்களுக்கு தேவையான பயிற்சியும், மதிநுட்ப ஆலோசனைகளையும் வழங்க, கபாடி முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் அடங்கிய ஒரு விளையாட்டு குழு அமைத்து, செயற்கை ஆடுகளம் (Rubber Mat Interlocking) உள்ளிட்ட பொருட்களை எனது சொந்த செலவில் வாங்கி, அந்த குழுவிடம் ஒப்படைக்கப்படும். அதை தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் கபாடி போட்டிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

எனவே 23.04.2026 அன்று நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கு ஒரு நல்வாய்பை தாருங்கள் என்று உங்கள் பொற்பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

 

இந்த வாக்குறுதி நோட்டீஸ்களை திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்தி தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று அவர்களிடம் கொடுத்து மீண்டும் எடப்பாடி ஆட்சி வருவதின் அவசியம் குறித்தும் எடப்பாடி யார் அறிவித்துள்ள வாக்குறுதிகள் பற்றி எடுத்துக் கூறியும்,தெற்கு மாவட்ட செயலாளர் திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் (படிக்கத் தெரியாதவர்களுக்கு படித்து எடுத்துக் கூறியும்) அதிமுக வேட்பாளர் குமார் வெற்றிக்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.