Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்டு, துறையூர் எம்.எல்.ஏ சீட்டுக்கான நேர்காணலுக்குச் செல்லாமல் சிறைக்கு சென்ற திமுக நிர்வாகி.

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திமுக நிர்வாகி ஒருவர் மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்டு, எம்.எல்.ஏ சீட்டுக்கான நேர்காணலுக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் சிறை சென்றிருக்கும் பரபரப்பான சம்பவம் திமுக கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள சிறுநாவலூர் ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், திமுக நிர்வாகி சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

 

உப்பிலியபுரம் ஒன்றியம், சிறுநாவலூர் ஏரியில் மீன் பிடிப்பதற்கான ஏலத்தை அதே பகுதியைச் சேர்ந்த யோகநாத் (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர்) எடுத்திருந்தார். நேற்று முன் தினம் அவர் தனது தொழிலாளர்களுடன் மீன் பிடிக்கச் சென்றபோது, திமுகவின் மாவட்ட பிரதிநிதியும், சிறுநாவலூர் ஊராட்சியின் முன்னாள் தலைவருமான சுப்பிரமணியன் மற்றும் அவரது நண்பர்கள் ஜெயராமன், ரகு ஆகியோர் அங்கு வந்து தடுத்துள்ளனர்.

 

“என் பகுதியில் நீ எப்படி மீன் பிடிக்கலாம்?” என்று கூறி யோகநாத்தை அவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் யோகநாத்திற்கு ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர்கள் கொண்டு வந்த வாகனத்தையும் சுப்பிரமணியன் அடித்து நொறுக்கியுள்ளார்.

 

மது போதையில் இருந்த சுப்பிரமணியன், “காரை ஏற்றி கொன்று விடுவேன், போதையில் ஏற்றிவிட்டேன் என்று கூறி அபராதம் கட்டி விட்டுப் போய்விடுவேன்” என்று மிரட்டல் விடுத்ததை அங்கிருந்தவர்களின் செல்போன் கேமராக்களில் பதிவு செய்து உள்ளனர். அவர் பேசிய ஆபாச வார்த்தைகள் மற்றும் மிரட்டல்கள் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்து, இன்று சென்னையில் கட்சியின் தலைமை முன்னிலையில் நடைபெற இருந்த எம்.எல்.ஏ வேட்பாளர் நேர்காணலில் சுப்பிரமணியன் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இந்த வன்முறைச் சம்பவத்தால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

சுப்பிரமணியன் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. மின்வாரியத் தொழிலாளர்களைத் தாக்கிய வழக்கு, கொத்தனார் ஒருவரைத் தாக்கிய வழக்கு. இவற்றில் நிபந்தனை ஜாமீனில் இருந்த நிலையில் தான் தற்போது மீண்டும் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட யோகநாத் அளித்த புகாரின் பேரில், (திருச்சி சேர்ந்த ஒரு சமுதாய தலைவர் சுப்பிரமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்) வெப்படை மற்றும் உப்பிலியபுரம் போலீசார் சுப்பிரமணியன், ஜெயராமன் மற்றும் ரகு ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சுப்பிரமணியனின் மனைவி குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் சுமார் 200 பேர் திரண்டு வந்து புகாரைத் திரும்பப் பெறக் கோரியும், யோகநாத் உறுதியாக நின்று சட்ட நடவடிக்கை எடுக்க வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.